Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Saturday, October 23, 2010

சிவயோகசாரம் 10


இந்த பதிவில் சில அடிப்படை  விஷயங்களை பார்ப்போம்.
இந்த உலகில் சுவாசத்தை அடிப்படையாக கொண்டு ஜீவிக்கும் உயிர்களில் மனித இனம் மட்டுமே அந்த சுவாசத்தின் நுட்பங்களை அறிந்த இனமாகும். அதிலும் சித்தர்கள் மற்றும் யோகியர்கள் மனிதகுலம் மேம்படும் பொருட்டு இடைவிடாது நடைபெறும் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி வல்லமை பெற்று, நல்வாழ்வு பெற வழிவகை செய்து கொடுத்துள்ளனர்.
(ஞானிகள் மற்றும் மகான்களுக்கு சுவாச முறை ஒரு பொருட்டல்ல. இவர்களில் சிலர் மேலாட்டமாக நாடிசுத்தி, பிராணயாமம் இவைகளைப்பற்றி விளக்கியுள்ளனர்.)
தன்னையறிய முயற்சிப்பவர்கள் மட்டுமே அதிக சிரத்தையுடன் இக்கலையை பயின்று வருகின்றார்கள். சிறுவயதிலிருந்தே இதை பழகுபவர்களுக்கு பிற்காலத்தில் மிகுந்த நன்மை ஏற்படுவது கண்கூடாகும்.
நிற்க,
நான் இந்த பயிற்சியை ஆரம்ப காலத்தில் பயிலும் போது நிறைய பேரிடம் இதைப்பற்றி வினவுவேன். பதில் என்ன வந்தது தெரியுமா?.
பொறந்ததிலிருந்து மூச்சு விடறோம். மூச்சு நின்னா சாவறோம் இதுதான் தெரியும். நீங்க புதுசா சொல்றீங்க என்றனர்.
இவர்கள் சுவாச ஓட்டத்தை கவனிப்பதே இல்லை. காரணம் இவர்களுடைய வாழ்க்கை முறை அப்படி அமைந்துள்ளது. சராசரி மனிதர் ஒருவர் காலையில் எழுந்தவுடன் தினசரி கடமைகளை செய்து முடித்துவிட்டு அக்கடான்னு இரவு படுத்து தூங்கி எழுந்து, மறுநாளும் தனது கடமைகளை செய்யத் துவங்கி விடுகின்றார். இடைப்பட்ட நேரத்தில் தமது சுவாசத்தை கவனிக்க அவருக்கு நேரமிருப்பதில்லை. வடகலை, இடகலையை, சுழுமுனையைப் பற்றிய விபரங்களை அவருக்கு கூறினாலும், அது ஏம்ப்பா நமக்கு அதெல்லாம் வேண்டாம் என்று கூறி மீண்டும் தமது கடமையை செய்யத் துவங்கி விடுகின்றார்.
இந்நிலையில் நான் யார் ? என்று அறியத்துடிக்கும் சில ஜீவாத்மாக்கள் மட்டும் பூர்வ புண்ணிய பயனால், இறைவனின் திருவருளால் ( இவன் ஆடியது போதும் மீண்டும் நம்மையே வந்தடையட்டும் என்ற திருவருளால்) தக்கதொரு குருவின் மூலம் அல்லது இறைவனையே குருவாகக் கொண்டு தன்னையறித்தக்க கலைகளில் வாசியோகம், சரக்கலைகளும் அவற்றில் ஒன்று என்று கருதி, இக்கலையை பயில முயல்கின்றனர்.
இந்த கலையை இந்த பிறவியிலேயே முழுவதுமாக கற்றுக் கொள்ளமுடியமா? என்றால். அவரவர் முயற்சியினாலும் வினைப்பயனின் அளவினாலும் முடியும் முடியாதென்பது மாறுபடும். சிலருக்கு சென்ற பிறவின் பயனாக விட்டகுறை தொட்ட குறையாக இப்பிறவியில் முழுமை அடைய வாய்ப்பு உண்டு. அல்லது இந்த பிறவியில் துவங்கி வரும் பிறவிகளிலாவது முழுமையடைய வாய்ப்பு உண்டு.

தன்னையறிய இந்த கலைகளை அவசியம் பயில வேண்டுமா? எனில். அவ்வாறில்லை. சிலர் இறைவன் மீது அளவற்ற பக்தியால், சிலர் யோகத்தால், சிலர் (தொண்டு) கர்மத்தால், சிலர் ஞானத்தால் தன்னை அறிந்து கொள்ளமுடியும்.
எந்த ஒரு செயலுக்கும் இதுதான் வழி என்று அறுதியிட்டு கூறமுடியாது. இறைவனின் சித்தம் எப்படியோ அப்படியே அனைத்தும் நடக்கும். நீங்கள் செல்லும் வழியில் இறைவன்மீது நம்பிக்கை வைத்து சென்றீர்களானால் இறைவனை அடைய முடியும். தன்னை அறிய முடியும்.
நம்பிக்கை இல்லாமல் நீங்கள் எந்த வழியில் சென்றாலும் தன்னை அறிய முடியாது. இறைவனை அடையவும் முடியாது.  
அனைத்து வழியும் இறைவனை அடைவிக்கச் செய்யும். நமக்கு முன்னால் ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொருவர் சென்று தன்னையறிந்து நமக்கு வழிகாட்டியுள்ளனர். இது உண்மை.
நமக்கு தேவை நமது முன்னோர்கள் காட்டிய வழியின் மீது நம்பிக்கையும் முயற்சியும் மட்டுமே.
நமக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் இறவா நிலையில் அரூபமாக இருக்கின்ற சித்தர்கள்,  மனித குலம் உய்யும் பொருட்டு நமக்கு விட்டுச் சென்ற கலைகளில் இந்த வாசியோகமும், சரக்கலையும் ஒன்றாகும். (இந்த தளத்தில் சித்தர்களின் மற்ற கலைகளான மணி, மந்திர, ஒளஷத, ஜோதிடம் இன்னும் பிற கலைகள் பற்றி பின்னர் பார்க்கலாம். இவை எவ்வாறு மனித குலத்திற்கு பயன்படுகின்றது என்றும் பார்க்கலாம். இதற்கு கண்டிப்பாக சித்தர்களின் அருளாசியும், பரம்பொருளின் அருளும் தேவை. (எனக்கும், உங்களுக்கும் அருளாசி உள்ளதா? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.)
(//அடுத்த சிவயோகசாரம் பதிவில் சுவாசம் பற்றியும் சுவாச கலைகளை தமக்கு ஏற்ற கலைகளாக மாற்றும்முறை பற்றி பார்ப்போம்//)

Wednesday, October 20, 2010

சிவயோகசாரம் 09

நாடிகளின் நிலை
  முதல் ஆதாரமாகிய மூன்று நாடிகளைப்பற்றியும் விவரமாகச் சொல்லுவோம். அதாவது மனிதர்களுக்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை இருபத்து நான்கு. இவை எப்போதும் உறங்கிகொண்டிருக்கின்றன. இவைகளைக் குண்டலி சக்தி என்று ஆதிநாதர் அருளிச் செய்திருக்கின்றார்.
  குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது, பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழாகவும், இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும், இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்தக் குண்டலி சக்தியானது, பாம்பைப் போலச் சுற்றிக்கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும், மணிபூரகத்திற்குக் கீழாகவும் இருக்கின்றது. இந்த இருபத்துநான்கு நாடிகளுள் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றனர்.
இந்த பத்து நாடிகளில் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருக்கின்றபடியால், அதில் இடகலையானது தேகத்தின் இடது பாகத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலது பக்கத்திலும், சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலும் இருக்கின்றன.
இக்குண்டலி சத்தியைப் பற்றி விவரமாக பின்னே சொல்லப்படவிருக்கின்றது.
//..அடுத்த சிவயோகசாரம் 10 பதிவில் சில அனுபவ பூர்வமான விஷயங்களை பார்ப்போம். ..//

Thursday, October 14, 2010

நான் யார்? 02


அருளுடையீர் வணக்கம்,
கடந்த 2010 செப்டம்பர் 14 -ம் நாள் சில சூழ்நிலை கருதி நான் யார்? என்னும் தலைப்பில் ஒரு பதிவினை இட்டிருந்தேன். (முன்பே படிக்காதவர்கள் தற்போது படிப்பதற்கு சுட்டுக ) அந்த பதிவினையிட்டு இன்றோடு ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. அந்த பதிவில் சித்தர்கள் தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பி அதற்குண்டான பதிலையும் வேண்டியிருந்தேன். சில நண்பர்கள் அதற்கு பதில் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இனி நான் யார்? என்ற தலைப்பில் தொடராக வருபவற்றை படித்து வாருங்கள். இடையிலேயே எந்த முடிவும் எடுக்காதீர்கள். இந்த தொடருக்கு எதிர்மறையான கருத்துரைகள் எதுவும் இட வேண்டாம். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் அளிக்கின்றேன். கடைசிவரை படித்துவாருங்கள்.  முடிவில் நான் யார் ? என்பது விளங்க வரும்.
இந்த தொடர் உண்மையில் இறைவனின் அருட்பேராற்றலை உணர்ந்து, அருளே வடிவான பரம்பொருளின் திருவடியில் ஒன்ற வழிவகை செய்யும்.
இந்த தொடர்  எனது இறை அனுபவங்களையும், சித்தர்களின் அருளாசிகளையும், விளக்க வல்லது. இறைவனின் அருளாற்றலை வேண்டியும், சித்தர்களின் அருளாசிகளை வேண்டியும் நான் சென்று வந்த ( சென்று கொண்டிருக்கும்) மலைவாசஸ்தலங்களான சுருளிமலை, கொல்லிமலை, பர்வதமலை, வள்ளிமலை அனுபவங்களையும் விளக்கும்
இது உண்மை.
இந்த பிறவியில் எனது ஆத்மா இறைவனின் அருளை நோக்கி செல்கின்றது. பின்தொடருங்கள் நீங்களும் என்னைப்போல் இறைவனின் அருளுக்கு பாத்திரமாவீர்கள். இது திண்ணம்.

இனி தொடர்வோம் :

ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
                                               - வள்ளலார்
ஓம் அருட்சிவமே போற்றி!

திரு. ரமணன் அவர்கள் சித்தர்கள் தொடர்பான செய்திகளுக்கு தமது உண்மையைத்தேடி வலைத்தளத்தில் இருந்து ஒரு இணைப்பினை கொடுத்துள்ளார். அவருக்கு மீண்டும் நன்றி!.
அந்த இணைப்பு இதோ: http://ramanans.wordpress.com/2009/09/17/சித்தர்கள்-யார்

மேற்படி சித்தர்கள் தொடர்பான இணைப்பின் சாராம்சம் இதோ : இந்த சராம்சத்தில் நான் உங்களுக்கு கூற விரும்புவதை (இந்த தொடருக்கு தேவையானதை) வேறு நிறமிட்டு வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளேன்.
//...சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால் கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது? தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?..

- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள் இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்...//

சித்தர்களின் அருளாசி தொடரும்...............

Wednesday, October 13, 2010

சிவயோகசாரம் 08

சிவயோகசாரம் 06(07)ன் தொடர்ச்சி..

பிங்கலையின் பலனாவது

வலநாசியில் உண்டாகின்ற பிங்க‍லை வாயுவில் அதாவது சூரியநாடிக் காலத்தில் கஷ்டமான வேலை எதுவும் அப்பியசிக்க, எவ்வித கொடூரமான செய்கையும் செய்ய, ( அய்யோ! நமக்கு வேண்டாம் கொடூர செய்கை) போஜனம் செய்ய, மலம் கழிக்க, போகம் செய்ய, கடல் யாத்திரை போக, சண்டை செய்ய, படை எடுக்க, கஷ்டமான சாஸ்திரம் கற்க, குதிரை முதலாகிய நாற்கால் ஜீவன்களை வாங்க விற்க, மட்டமான மலை ஏற, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலாகிய பழக்கம் செய்ய, ஆறு குளம் கடல் முதலாகிய இடங்களில் நீந்த, உலோகங்களைக் குறித்த சாஸ்திரங்களைப் படிக்க, பாடம் எழுத, பணம் வாங்க கொடுக்க, எஜமானத்துவமான வேலை பார்க்க, அரசனைக் காண, இரண வைத்தியத்திற்கு மருந்து செய்ய, கடினமான ஆகாரம் ஜீரணிக்க இவை முதலாகிய செய்கைகள் செய்ய வேண்டு மென்பதாம்.

சுழுமுனையின் பலனாவது

சுழுமுனை நாடி, இரண்டு நாசியிலும் வரும் சுவாசம்.
அதை அதன் நடவடிக்கைக் காலத்திலேதான் அறியலாம்.
ஒரு கணத்தில் இட நாசியிலும், ஒரு கணத்தில் வலநாசியிலும் வரும் வாயுவானது இரண்டு நாசியிலும் வரும்போது சுழுமுனையாம்.
இந்த சுழுமுனை நடக்கும் காலத்தில் உலக நடவடிக்கைகளை நிறுத்தி விடவேண்டும். தவறி நடந்தால் அபஜெயமாம்.
எண்ணத்துக்கு விரோதமாய் நடக்கும் இந்த வாயுவின் காலத்திலே ஆத்துமத் தியானமும், பூசையும் செய்யலாம்.
இந்த வாயு நடக்குங் காலத்திலேதான் சுவாச பந்தனம் செய்யக்கூடும்.
இந்தச் சுவாசம் கட்டுவதனால் மனத்திற்கும் தேகத்திற்கும் இன்பம் உண்டாகின்றது.
//..... நாம் இதுவரை கண்ட மூன்று நாடிகளின் நிலைபற்றி அடுத்த பதிவில்  பார்க்கலாம்......//

Friday, October 8, 2010

சிவயோகசாரம் 07


சிவயோகசாரம் 07

சிவயோகசாரம் 06க்கு கருத்துரையிட்டிருந்த திரு. ஜெகதீஷ் அவர்களுக்கு பதில் கருத்துரை இட்ட பின்னர் எனக்குள் சாரல் மழை போன்ற இனம்புரியாத ஆனந்தம் தோன்றிய வண்ணம் இருந்தது. சிறிது நேர தியானத்தின் பின் உருவானதுதான் இந்த பதிவு சிவயோகசாரம் தொடர்ந்து படித்துவரும் இதனையும் படிக்க வேண்டுகின்றேன். சிவயோகசாரத்தின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம்.

இணையத்தில், இந்த அருட்சிவம் வலைப்பதிவின் கருத்துக்களைப் போன்று எண்ணற்ற ஆன்மீக அன்பர்கள் வலைப்பதிவுகளையும், இணைய தளங்களையும் நிறுவி நிர்வகித்து வருகின்றார்கள்.
நான் (எனும் எனது ஆத்மா), இச்சமயம் மானசீகமாக, அவர்களின் திருக்கரங்களை எனது கையில் எடுத்து, கண்களில் ஒற்றிக் கொள்கின்றேன்.

வாழ்க அவர்கள் நீடூழி!.
வளர்க அவர்களின் பணி!.

ஆனந்த வள்ளல் எனும் வலைப்பூவில் ஆனந்ஜோதி என்பவர் வாசியோகம் பற்றியும் மற்றும் பல விஷயங்களையும் எழுதியுள்ளார். மற்றும் அவரின் www.ourguru.net லும் நிறைய ஆன்மீக விஷயங்களை கூறியுள்ளார். மேலும் PDF வடிவில் சில மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய இணைப்புகளையும் கொடுத்துள்ளார்.
இவ்வலைதளத்தை காணும் திரு. ஜெகதீஷும் மற்ற ஆன்மீக அன்பர்களும் மேற்படி மின் நூலினை தரவிறக்கம் செய்து படித்து, தெளிந்து, பயன்பெற வேண்டுகின்றேன்.

இங்கே அன்னார் அவர்களின் தளத்திலுள்ள இரு மின் நூல்களை குறிப்பிடுகின்றேன்.  


 1. ஆத்ம தரிசனம் 
(PDF File, winzip file-ஆக சுருக்கப்பட்டுள்ளது File Size 26.1 MB)


2. அன்னையின் அருள்வழி
(PDF File, winzip file-ஆக சுருக்கப்பட்டுள்ளது File Size 14.3 MB)
மேற்படி நூல்களில் உள்ள சில வரிகளை JPG வடிவில் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.

 

இதே போன்ற ஒத்த எண்ணமுடையதுதான் இந்த அருட்சிவம் வலைத்தளமும்.

முதலில் ஆனந்த வள்ளல் தளத்திற்கு செல்லுங்கள், படியுங்கள்.
http://anandavallal.blogspot.com/

பின்னர்
http://ourguru.net/publications.aspx இந்த முகவரியில் சென்று மேற்கூறிய இரு மின்நூல்களையும் மற்ற மின்நூல்களையும் தரவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும்.
திரு. ஆனந்ஜோதியின் மற்றொரு தளம் இது
http://anandjothi.info
http://anandjothi.info/AboutUs.aspx
About Anand Jothi என்பதில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

//...Anand Jothi is a collection of disciples of Sathguru Dr. Nithyanandam. It is a spiritual organization whose values underlie the experience and messages of all the prophets down the ages across all religions and times in history.

We pay tribute to the Divine Cosmic Mother, who sustains the world and the Rishis and saints who uphold her principles for this world and beyond.

We believe:

There is a supreme, all encompassing force, divine and benevolent, called by different names by different religions.

All religions lead to the same goal and everyone of them deserves equal respect.

Every soul is originally and ultimately divine in nature, whatever attire it may wear in between.

There are methods by which every human being is capable of speeding up the process of realising the universal Truth and every soul making a sincere attempt in this direction will recieve Divine protection and help....//
 
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை.

பரம்பொருளே!,
அருட்சிவமே!,
என் தந்தையே!,
ஆனந்த கூத்தாடுகின்றேன்!,
நான் ஆனந்த கூத்தாடுகின்றேன்!!..........


மேற்படி மின்நூல்களை தரவிறக்கம் செய்து படித்து பார்த்துவிட்டு, அதை உருவாக்கியவர்களுக்கும், இந்த தளத்திற்கும் தங்களது கருத்துக்களை கருத்துரையாக இட வேண்டுகின்றேன்.
சிவயோகசாரம் தொடர், தொடர்ந்து வெளிவரும்.

Thursday, October 7, 2010

சிவயோகசாரம் 06

சிவயோகசாரம் 05ன் தொடர்ச்சி..

இடகலையின் பலனாவது

          இடகலை நடக்குங்காலம் தாகம், ஜலவிருத்தி, தீர்மானம் செய்ய, வேலை செய்ய, நகை செய்ய நகையணிந்து கொள்ள, அன்னிய தேசத்திலிருந்து யாத்திரை போக, வீடு சத்திரம் கோவில் கட்ட, தருமஞ் செய்ய, சாமான் சேகரஞ் செய்ய, கிணறு, குளம் வெட்ட, கல்யாணம் செய்ய, வஸ்திரம் கட்ட, வைத்திய சாஸ்திரம் அப்பியாசம், மருந்து, கற்பங்கள் முதலியவை செய்ய, சினேகிதரைக் காண, வியாபாரஞ் செய்ய, தானியம் இருப்புச் செய்ய, வீட்டிற்குக் குடிபோக, விதை விதைக்க, சமாதானஞ் செய்ய, அன்னியபாஷை அப்பியாசஞ் செய்ய, உபதேசஞ் செய்ய, பலனைப்பற்றி யாத்திரை போக, யானை, குதிரை ஏறி வேட்டைக்குப் போக, எஜமானாக, ஆடல், பாடல் கற்க, ஒரு புதிய ஊருக்குப் போக, பந்துக்களை காணவுமாகிய நடவடிக்கைகள் செய்தால் பயன்படும்.
          இடைகலையானது சரிவர நடந்தால், தேகம் செளக்கியமாக இருக்கும். இதில் ஆகாசத்தின் அம்சமிருக்குமானால் முன்சொன்ன நடவடிக்கைகளுள் ஒன்றும் செய்யக்கூடாது. இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும், மேற்சொன்ன வேலைகளை இடைகலையில் நடத்த வேண்டுமென்பதாம்.
//.. ஆகாசத்தின் அம்சம் பற்றி வரும் பதிவுகளில் வரும். அடுத்தது பிங்கலையின் பலன் பற்றியது//

Monday, October 4, 2010

சிவயோகசாரம் 05


சிவயோகசாரம் 04ன் தொடர்ச்சி..
பிராணவாயுவின் நிலை
 மாணாக்கன் ஆரம்பத்தில் கவனிக்க வேண்டிய விதிகள் யாதெனில், அவை சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்று நாடிகளின் நடைகளெனப்படும்.
மூன்று கலையின் சுவாசத்தினாலுண்டாகும் சத்தத்தைக் கண்டறிய வேண்டும்.
அச்சப்தத்துக்கு "அஜபா" என்பது பெயராம் அந்தச் சப்தத்தைக் கண்டுபிடிக்கச் சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன : வாயுக்கள் மூன்று: அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பன. இடகலை என்பது இடது நாசியிலும், பிங்கலை என்பது வலது நாசியிலும், சுழுமுனை என்பது இரண்டு நாசியிலும் வரவும் போகவுமிருக்கிற சுவாசம். இதற்கு அஜபா ‍என்பது பெயராம். இடைகலை என்பது சந்திரனும், பிங்கலை என்பது சூரியனும், சுழுமுனை என்பது அக்கினியுமாம்.
அன்றியும், இடகலையானது, சுக்கிலபட்சமாகிற அமாவாசையில் பிரதமை முதல் மூன்று நாளைக்குக் காலையில் தொடர்ச்சியாய் வரவேண்டும்.
சதுர்த்தி முதல் மூன்று நாளைக்குப் பிங்கலை நடக்க வேண்டும்.
இதே மாதிரி சுக்கிலபட்சத்தில் சந்திரகலை வராவிடில் அவனுக்குத் தேகம் அசெளகரியப்பட்டுக் கவலை மேலிடுமென்றறிக. அதைச் சரிப்படுத்த வேண்டிய விஷயத்தைப்பற்றி பின்வரும் வாக்கியத்தில் காண்க.
கிருஷ்ணபட்சம், அதாவது பெளர்ணமி பிரதமை முதல் மூன்று நாட்களும் பிங்கலை நடக்க வேண்டும்.
பின் மூன்று நாட்களுக்கும் இடகலை நடக்க வேண்டும்.
இத்தன்மையை இரண்டு கலைகளும் மும்மூன்று நாளைக் கொருமு‍றை மாறி மாறி நடக்க வேண்டும்.
இதை மாணாக்கன் குறிப்பாகத் தினம் தினம் கவனிக்க வேண்டும்.
சுழுமுனை கூடுவது கஷ்டமானதால், அதை சாக்கிரதையாய் அப்பியசித்துப் பழகல் வேண்டும்.
மாணாக்கனுக்கு முக்கிய வேலை, இடகலையும், பிங்கலையும் திதிக்கு தவறி நடந்தால், அதை மாற்ற வேண்டிய விஷயத்தைப் பற்றிக் குரு மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டும்.
///இடகலை, பிங்கலைகளை மாற்றும் முறைபற்றி பின்னர் நான் கூறுகின்றேன்.. // 
அடுத்ததாக இடகலையின் பலனைப் பற்றி சிவயோக சாரத்தில் காணப்படுவதை பார்ப்போம்.  

வள்ளலார் அவதார தினம் & சத்தியஞானசபை முன்மண்டபம் திறப்பு விழா


அன்புடையீர்! அருளுடையீர் ! வணக்கம்,
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சத்திய ஞானசபை முன்மண்டபம் திறப்பு விழா 02.10.2010ல் மாண்புமிகு தமிழக அரசு நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் திருக்கரத்தால் திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் சுற்றுலாத்துறை நிதியின் மூலம் ரூ. 68 லட்சம் மதிப்பீட்‍டில் பல்வேறு அடிப்படைகள் வசதிகள் செய்யப்பட்டதின் நிறைவு விழாவும் இனிதே நடந்து முடிந்தது.
அடுத்து, சிதம்பரம் இராமலிங்க அடிகளார் என்னும் திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானாரின் 188 வது அவதார தினவிழா வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 05.10.2010ல் இனிதே நடைபெற உள்ளது. மேற்படி விழா நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளில் கணினி வகையான வேலைகளை மிக அதிக அளவில் நான் செய்ய வேண்டி இருந்ததால், அருட்சிவம் வலைப்பதிவில் கடந்த 13 நாட்களாக என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
மேலும், கடந்த 10 தினங்களுக்கு முன் ஜேசிபி (பொக்லைன் ) இயந்திரம் மூலம் சத்தியஞானசபை மைதானத்தில் சுற்று மதிற்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியில் புதைத்திருந்த தொலைபேசி கேபிளானது பல இடங்களில் துண்டாகிவிட்டது. அவ்வளவுதான். இந்த பகுதியில் இருந்த பல நூறு தொலைபேசிகள் இயங்க வில்லை. பிராட்பேண்ட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இணைப்பினை பி.எஸ்.என்.எல். ன் மெத்தன போக்கிற்கு பிறகு 02.10.2010ல் சரி செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் வலைப்பதிவை தொடர முடியவில்லை. அவ்வப்போது நண்பரின் கணினியில் இருந்து அவ்வப்போது வரும் கமென்ட்ஸ்களை ஆக்டிவேட் செய்தேன்.
இனி அருட்சிவம் வலைப்பதிவு தொடரும்.


வள்ளற் பெருமானாரின்  188வது அவதார தினம்
05.10.2010 



திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்! சரணம்! 
சற்குருநாத சுவாமிகள்  திருவடிகளே சரணம்! சரணம்!

திருஅருட்பிரகாச வள்ளலார்  


சத்திய ஞானசபை முன்மண்டபம் பகல் தோற்றம் 


சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் 


சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் ( முன்புறம்) 

சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் ( உட்புறம்)  

சத்திய ஞானசபை முன்மண்டபம் இரவு  தோற்றம் ( உட்புறம்)   


சத்திய தருமச்சாலை பிரசங்க மேடை   


சத்திய ஞானசபையில் 02.10.2010 ல் மாதப்பூச ஜோதி தரிசனம்    

புதிய முன்மண்டபத்துடன் கூடிய சத்திய ஞானசபை வெளிப்புறத் தோற்றம்