சிவயோகசாரம் 15 ன் தொடர்ச்சி ...
அஜபாவின் நிலை
இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பத்மாசனமிட்டு உட்கார்ந்து அஷ்டகந்த தூபமிடவேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது, மிக்க நலமாக இருக்க வேண்டும். தான் தனியேதான் இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக் காலமாவது வைத்துக் கொண்டு அப்பியாசிக்க வேண்டும்.
இருநாசித்துவாரங்களிலிருந்து வெளியே வருகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஹம்" என்பதையும் உள்ளே போகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஸம்" ( சிலர் இதனை "ஸோ" என்றும் கூறுவர்) என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த "ஹம்ஸம்" ( "ஸோஹம்") என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன், இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன் ஆவான். இந்த அப்பியாசம் செய்பவர்கள் உலக ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளவேண்டும். ஒரேயடியாக குறைக்க கூடாது.
ஏன் எனில், ஒரு வருட காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடும் என்பதால், நாளுக்கு நாள் கொஞ்ச கொஞ்சமாக நீக்க வேண்டியது. சாதகர் கூடிய அளவு மனதை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாக தன்னுடைய சுவாசத்தைக் குறித்து, அதனால் உண்டாகும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும். இப்படி அப்பியாசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறிய வேண்டியது.
மூன்று நாடிகளைக் கண்டறியாமல், பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக் கூடாது. இந்த யோகம், அப்பியசித்து ஜீரணசக்தியை உணர்ந்து தேகத்தைப் பலப்படுத்தவேண்டும். அதாவது அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, துவரை உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரை வயிறு அன்னமும், கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். ஏன் எனில், உள் வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டுமென்று உணர்க.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக்கூடாது. இத்தன்மைப்பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் குடும்பத்தினரும், செல்வந்தர்களும், ஏழைகளும், ஜாதி பேத, நிற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை. எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தைச் செய்வார்களோ அவர்களுக்கு இவை சித்திக்கும் என்பது நிச்சயம்.
ஒருவன் பதினெட்டு வயதில் இந்த அப்பியாசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். (செய்யும் பயிற்சியினைப் பொறுத்து காலங்கள் சாதகருக்கு சாதகர் வேறுபடும்) இத்தன்மையான யோகி மது, மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி, ராஜஸ, தாமஸ குணங்களற்று, தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து, அதிதீவிரபக்குவமாய் வாழ்வான்.
தொடரும்...