இந்த பதிவில் சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.
இந்த உலகில் சுவாசத்தை அடிப்படையாக கொண்டு ஜீவிக்கும் உயிர்களில் மனித இனம் மட்டுமே அந்த சுவாசத்தின் நுட்பங்களை அறிந்த இனமாகும். அதிலும் சித்தர்கள் மற்றும் யோகியர்கள் மனிதகுலம் மேம்படும் பொருட்டு இடைவிடாது நடைபெறும் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி வல்லமை பெற்று, நல்வாழ்வு பெற வழிவகை செய்து கொடுத்துள்ளனர்.
(ஞானிகள் மற்றும் மகான்களுக்கு சுவாச முறை ஒரு பொருட்டல்ல. இவர்களில் சிலர் மேலாட்டமாக நாடிசுத்தி, பிராணயாமம் இவைகளைப்பற்றி விளக்கியுள்ளனர்.)
தன்னையறிய முயற்சிப்பவர்கள் மட்டுமே அதிக சிரத்தையுடன் இக்கலையை பயின்று வருகின்றார்கள். சிறுவயதிலிருந்தே இதை பழகுபவர்களுக்கு பிற்காலத்தில் மிகுந்த நன்மை ஏற்படுவது கண்கூடாகும்.
நிற்க,
நான் இந்த பயிற்சியை ஆரம்ப காலத்தில் பயிலும் போது நிறைய பேரிடம் இதைப்பற்றி வினவுவேன். பதில் என்ன வந்தது தெரியுமா?.
பொறந்ததிலிருந்து மூச்சு விடறோம். மூச்சு நின்னா சாவறோம் இதுதான் தெரியும். நீங்க புதுசா சொல்றீங்க என்றனர்.
இவர்கள் சுவாச ஓட்டத்தை கவனிப்பதே இல்லை. காரணம் இவர்களுடைய வாழ்க்கை முறை அப்படி அமைந்துள்ளது. சராசரி மனிதர் ஒருவர் காலையில் எழுந்தவுடன் தினசரி கடமைகளை செய்து முடித்துவிட்டு அக்கடான்னு இரவு படுத்து தூங்கி எழுந்து, மறுநாளும் தனது கடமைகளை செய்யத் துவங்கி விடுகின்றார். இடைப்பட்ட நேரத்தில் தமது சுவாசத்தை கவனிக்க அவருக்கு நேரமிருப்பதில்லை. வடகலை, இடகலையை, சுழுமுனையைப் பற்றிய விபரங்களை அவருக்கு கூறினாலும், அது ஏம்ப்பா நமக்கு அதெல்லாம் வேண்டாம் என்று கூறி மீண்டும் தமது கடமையை செய்யத் துவங்கி விடுகின்றார்.
இந்நிலையில் நான் யார் ? என்று அறியத்துடிக்கும் சில ஜீவாத்மாக்கள் மட்டும் பூர்வ புண்ணிய பயனால், இறைவனின் திருவருளால் ( இவன் ஆடியது போதும் மீண்டும் நம்மையே வந்தடையட்டும் என்ற திருவருளால்) தக்கதொரு குருவின் மூலம் அல்லது இறைவனையே குருவாகக் கொண்டு தன்னையறித்தக்க கலைகளில் வாசியோகம், சரக்கலைகளும் அவற்றில் ஒன்று என்று கருதி, இக்கலையை பயில முயல்கின்றனர்.
இந்த கலையை இந்த பிறவியிலேயே முழுவதுமாக கற்றுக் கொள்ளமுடியமா? என்றால். அவரவர் முயற்சியினாலும் வினைப்பயனின் அளவினாலும் முடியும் முடியாதென்பது மாறுபடும். சிலருக்கு சென்ற பிறவின் பயனாக விட்டகுறை தொட்ட குறையாக இப்பிறவியில் முழுமை அடைய வாய்ப்பு உண்டு. அல்லது இந்த பிறவியில் துவங்கி வரும் பிறவிகளிலாவது முழுமையடைய வாய்ப்பு உண்டு.
தன்னையறிய இந்த கலைகளை அவசியம் பயில வேண்டுமா? எனில். அவ்வாறில்லை. சிலர் இறைவன் மீது அளவற்ற பக்தியால், சிலர் யோகத்தால், சிலர் (தொண்டு) கர்மத்தால், சிலர் ஞானத்தால் தன்னை அறிந்து கொள்ளமுடியும்.
எந்த ஒரு செயலுக்கும் இதுதான் வழி என்று அறுதியிட்டு கூறமுடியாது. இறைவனின் சித்தம் எப்படியோ அப்படியே அனைத்தும் நடக்கும். நீங்கள் செல்லும் வழியில் இறைவன்மீது நம்பிக்கை வைத்து சென்றீர்களானால் இறைவனை அடைய முடியும். தன்னை அறிய முடியும்.
நம்பிக்கை இல்லாமல் நீங்கள் எந்த வழியில் சென்றாலும் தன்னை அறிய முடியாது. இறைவனை அடையவும் முடியாது.
அனைத்து வழியும் இறைவனை அடைவிக்கச் செய்யும். நமக்கு முன்னால் ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொருவர் சென்று தன்னையறிந்து நமக்கு வழிகாட்டியுள்ளனர். இது உண்மை.
நமக்கு தேவை நமது முன்னோர்கள் காட்டிய வழியின் மீது நம்பிக்கையும் முயற்சியும் மட்டுமே.
நமக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் இறவா நிலையில் அரூபமாக இருக்கின்ற சித்தர்கள், மனித குலம் உய்யும் பொருட்டு நமக்கு விட்டுச் சென்ற கலைகளில் இந்த வாசியோகமும், சரக்கலையும் ஒன்றாகும். (இந்த தளத்தில் சித்தர்களின் மற்ற கலைகளான மணி, மந்திர, ஒளஷத, ஜோதிடம் இன்னும் பிற கலைகள் பற்றி பின்னர் பார்க்கலாம். இவை எவ்வாறு மனித குலத்திற்கு பயன்படுகின்றது என்றும் பார்க்கலாம். இதற்கு கண்டிப்பாக சித்தர்களின் அருளாசியும், பரம்பொருளின் அருளும் தேவை. (எனக்கும், உங்களுக்கும் அருளாசி உள்ளதா? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.)
(//அடுத்த சிவயோகசாரம் பதிவில் சுவாசம் பற்றியும் சுவாச கலைகளை தமக்கு ஏற்ற கலைகளாக மாற்றும்முறை பற்றி பார்ப்போம்//)
No comments:
Post a Comment