Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, August 22, 2011

நன்றிகள் பல - அருட்சிவமாகிய பரம்பொருளுக்கும், வாழ்த்தியவர்களுக்கும்.




நாம் திட்டமிட்டு செய்யும் காரியம்
எதிர்பாராமல் தோல்வியடையும்போது நமது மனம் சோர்வுறுகின்றது.

அதே சமயம் திட்டமிடாமல் செய்யும் காரியும் வெற்றியடையும் போது மனம் கர்வம் அடைகின்றது.


ஆனால் திட்டமிட்ட காரியம்
திட்டமிட்டதை விட சிறப்பாக அமையும் போது மனம் இறைவனின் அருளாற்றலை நினைத்து ஆனந்தப்படுகிறது. இப்படித்தான் குழந்தை யோகியின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் நல்லபடியாக, திட்டமிட்டதைவிட சிறப்பாக (முந்தைய பதிவில் கூறியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி) இறைவன் அருளால் நடந்தது.


 திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் சிங்கபுரி பதிகம் பாடிய
குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் அருள்மிகு சுப்புராயர் சன்னதியில்
37வருடங்களுக்கு முன் எனது பிறந்த நாளை முன்னிட்டு இரவு 8.50 மணியளவில் வேள்வியுடன் கூடிய சிறப்பு ஆராதனையுடன் எனது முதல் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

 எனது தகப்பனார் 40 வருடங்கள்  பல சிவபூசைகள் செய்து வரம்
இருந்து, பிறந்தவன் நான்.


எனது தகப்பனார் 40 வருடங்களுக்கு
மேலாக எத்தனையோ அன்பர்களுக்கு தமது கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தவர். அவர்களுக்கு எல்லாம் குழந்தை பாக்கியம் உடனே உண்டானது. ஏனோ, இறைவன் இவருக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் கருணை காட்டவில்லை. 

எனது தகப்பனாரின் முதல் மனைவி 25 வருடங்கள் குழந்தைப் பேறு
இல்லாமல் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியாகிய எனது தாயாருக்கு 15 வருடங்கள் குழந்தை இல்லை. இவர் சிறந்த முருக பக்தர். உறங்கப் போனாலும் முருகா, விழித்தாலும் முருகா என்று எந்த நேரமும் பழனிமலை ஆண்டவனை அழைப்பவர்.

நான் எனது தகப்பனாரின் 70 வது வயதில் பிறந்தவன் . எனக்கு எட்டு வயதாகும் போது எனது தகப்பனார் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அருளாளர்கள் பிறப்பின் ரகசியத்தை
அந்த இறைவனும், ஞானபுருஷர்களும் மட்டுமே  அறிந்த ஒன்று.


இந்த அருளாளனை அறிந்த ஞானபுருஷர்களும் உண்டு.

இதன் விபரம் பின்னிட்டு நேரம் வரும்போது பதிவேற்றுகின்றேன்.

( இதனை சிலர் தம்பட்டம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான்
பொருட்படுத்தப்போவதில்லை.)

என்னை அறிந்து, என்னுடன் நட்பு
பூணும் அன்பர்களுக்கு என்னளவில் நான் அறிந்த ஞானவிடயங்களை சத்திய
தர்மத்தோடு, பொய்யின்றி உண்மையாக தெரிவிப்பேன். இதனை அறிந்து பயன்பெறுவது என்பது அந்தந்த ஆத்மாக்களின் பூர்வ புண்ணியத்தை பொறுத்தது.


ஒருவருக்கு புத்திர பாக்கியம்
என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்தே அமையும். நல்ல ஆத்மாக்கள்  சிறந்த ஒழுக்கமுள்ள தாய் தந்தையருக்கு பிறக்கும். அவ்வாறே, ஒழக்கமுள்ள தாய் தந்தையருக்கு நல்ல ஆத்மாக்கள் குழந்தையாக பிறக்கும். இவ்வகையில் எனது தம்பி மகன் யோகியின் ஜாதகத்தில் சில நல்ல அம்சங்கள் உள்ளது. எனது தந்தையாரின் குணாதியசத்தை போன்றே அமைவான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால்தான் எனது தாயாரின் அறிவுரைப்படி அவனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு சிலவிடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது மகள் காயத்ரி பிறந்தது
01.07.2000 சனிக்கிழமை 

ஆனி அமாவாசை.

( எனது குருநாதர் சித்திபெற்றது ஆனி அமாவாசை)மிருக சீரட நட்சத்திரம். கடக லக்கினம். லக்கினத்தில் கேது. 12 ம் மிடத்தில் ராகு, குரு , சனி தவிர்த்து ஏனைய ஐந்த கிரகங்கள் அமைந்துள்ளது. )

எனது மகன் குருபிரகாஷ் பிறந்தது
01.02.2003 சனிக்கிழமை 

தை அமாவாசை.

திருவோண நட்சத்திரம். இருவருமே ஒன்றாம் தேதி, சனிக்கிழமை, அமாவாசையில் பிறந்தவர்கள்.

(சோதிடவியல்படி அமாவாசையை நான்கு
பாகமாக பிரித்து பலன் காணுவது மரபு.)  


நிற்க,

சிவயோகசாரம் தொடருக்கு ரிவிசன் செய்ய வேண்டும், என் ஞானவாழ்வில் சம்பந்தப்பட்ட திருப்பரங்குன்றம் சற்குரு மாயாண்டி சுவாமிகள் பற்றி கூற வேண்டும். சுருளிமலை சித்த அனுபவங்கள் பற்றி கூறவேண்டும். ‍கொல்லிமலை சித்த அனுபவங்களைப் பற்றி கூறவேண்டும். மதுரை
மீனாட்சியம்மன் அருளினைப் பற்றி கூறவேண்டும். 

அனானி கந்தசாமி அவர்களுக்கு பதில்
சொல்லவேண்டும் (போகர் நவபாஷாண முருகன் சிலை செய்தது குறித்து) 

இன்னும் எத்தனையோ வேண்டும் உள்ளது.

நான் முழுநேர கணினிப் பணியாளர் என்பதால் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்து பார்த்து கண்கள் சோர்ந்துவிடுகிறது. கைகளும் டைப்பிங் செய்வதால் அசந்து விடுகின்றது. எனது பணி அறநிலையத்துறை சார்ந்ததால் எந்த நேரம் பார்த்தாலும் ஏதேனும் ஒரு திருக்கோயிலுக்கு நான் பணி செய்வதாகவே அமைந்து விடுகின்றது.
இதனையும் தெய்வீக காரியமென்றே நினைத்து சந்தோஷமாக செய்கின்றேன்.


இதற்கிடையில் நெட் connection க்கு
என்று வாங்கிய நோக்கியா போனும் போனவாரத்தில் சிம்மோடு தொலைந்துவிட்டது.
பிராட்பேண்டும் நோ. நண்பரிடமிருந்து பெற்ற nokia 7210 supernova செல்
மூலம் இப்ப நேரம் ஒடிக்கிட்டிருக்கு.

(இந்த மாடல் நல்லாயிருக்கு. ஆனா இப்ப வெளிவருவது இல்லை.)

 கடந்த ஒரு வாரமாக போஸ்ட் பப்ளிஷ், கமென்ட்ஸ் பப்ளிஷிங், மின்னஞ்சல்
பார்ப்பது எல்லாம் இந்த செல்லில்தான்.


இப்படி பலதரப்பட்ட எனது சூழ்நிலையில் பதிவுகள் சரியாக இடமு‍டியவில்லை. வீட்டில் உள்ள  PC யின் பழுதினை நீக்கி விட்டால் சற்று சிரமம் குறையும். இதற்கெல்லாம் அந்த மகாதேவனின் கருணை வேண்டும். பார்ப்போம் அவன் திருவிளையாடலை.



மீண்டும் நிற்க,

முந்தைய பதிவில் பின்னூட்டத்தின் மூலம் குழந்தை யோகிக்கு ஆசியையும், வாழ்த்தையும்
தெரிவித்திருந்த  திரு. இறைவனடி யுவராஜா, 

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி, 

எனது அன்பிற்குரிய ஜெகதீஷ்

ஆகியோர்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும், நேரில் கலந்துகொண்டு ஆசிர்வதித்த பெரியோர்களுக்கும், இவைகள் எல்லாவற்றையும் நல்லவிதமாக நடப்பித்த பரம்பொருள் அருட்சிவத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் பல.



சென்ற பதிவில் குழந்தையை கையில்
வைத்திருப்பதும் நானே.


இந்த பதிவில் வேள்வி செய்பவனும்
நானே.


சில நேரத்தில் Tools &
Software சகிதம் கம்ப்யூட்டரை குடைபவனும் நானே.


அப்பப்ப நம்ம கெட்டப் மாறும்.   உலகமே ஒரு நாடக மேடைன்னு பெரியவங்க சொல்லியிருப்பது சரிதானுங்க?.



BirthDay Function Cell
Photos  கீ‍ழே:






நான் பூஜைப் பணி செய்யும் சித்திவிநாயர் கோயிலின் கர்ப்ப கிரகம். 
இந்த கர்ப்பகிரகத்தில்தான் நான் தியானிப்பது வழக்கம். 





Friday, August 19, 2011

ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள்



ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள்

இன்று 19.08.2011 ம் நாள் ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் ஆகும்.
அந்த யோகி எனது தம்பியின் மகன் ஆவார்.
(இந்த பதிவினையும் படியுங்கள்)
இன்றைய தினம் இக்குழந்தையின் பிறந்த நாளினை முன்னிட்டு எங்களது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், அன்னதானமும், யோகியின் பிறந்த நேரம் இரவு 7.30க்கு வேள்வியும், உடன் தீப ஆராதனையும் நடைபெறும்.


(கோவை உயரியல் பூங்காவில் அலைபேசியில் எடுத்த புகைப்படம்)
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைதான் யோகி.  முழுப்பெயரே யோகி தான். பிறந்தது மூலம் நட்சத்திரம் 2ம் பாதம். கும்ப லக்கினம். பஞ்சமத்தில் கேது.  சப்தம ஸ்தானம் சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன்.

ஒரு ஆன்மாவிற்கு கிடைக்கும் ஆசிதான் வாழ்வின் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால், இக்குழந்தையை ஆசிர்வதிக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Thursday, August 18, 2011

அருட்சிவஞான பீடம்


அருட்சிவஞான பீடம்

நான்காம் ஆண்டு துவக்கம்.

நிகழும் கர ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் அருட்சிவஞானபீடத்தின் நான்காம் ஆண்டு துவக்க நாளாகும்.
கடந்த சர்வதாரி ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் ( 17.08.2008ல்) உலகிற்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாளன்று இப்பீடம் இறையருளால் துவக்கப்பட்டது. இப்பீடத்தால் மிகப்பெரிய அளவில் ஆன்மீகப் பணிகள் நடைபெறாவிட்டாலும் என் அளவில் சிற்சில ஞானப்பணிகள் நடைபெற்றுள்ளது.
அதில் ஒன்று மிகப்பழமையான சிவன் கோயிலுக்கு நந்தி எம்பெருமான் கற்சிலா விக்ரகம் (அவன் அருளாலே அவன் தாள் பணிந்து) அமைத்துக் கொடுத்தது. அந்தக் கோயிலின் சிவலிங்க வடிவம்தான். இந்த வலைப்பூவின் லோகோவில் அமைந்துள்ளது ஆகும். இத்திருக்கோயிலுக்கு நந்தி‍யெம்பெருமான் சிலா விக்ரகம் வந்த விபரம் பின்னர் ஒரு பதிவில் தெரிவிக்கின்றேன்.
இந்த அருட்சிவஞான பீடம் செயல்பாட்டின் பொருட்டு நான் பூசை செய்து வரும் எனது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலின் நிர்வாகத்தார் வசம் சில அனுமதி மற்றும் நிபந்தனை உறுதிமொழி குறித்தான விபரங்களை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தின் PDF நகல் இதோ கீழே இணைத்துள்ளேன். சுட்டி படிக்கவும்.


இக்கடிதத்திற்கு ஊர் மக்களிடமிருந்தும், கோவில் நிர்வாகம் வசமிருந்தும் அனுமதி அப்பொழுது கிடைத்ததின் பொருட்டு பீடமும் ‍செயல்பட்டு வருகின்றது.
இப்பீடத்தின் அருட்செயல்பாடுகள் குறித்தான விபரங்கள் பின்னிட்டு நேரம் இருக்கும்போது பகிர்கின்றேன்.

Thursday, August 11, 2011

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 12 அவதார தினவிழா செய்தியுடன் ஒரு செய்தி


கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 12 அவதார தினவிழா செய்தியுடன் ஒரு செய்தி


திருப்பரங்குன்றம் காகபுஜண்டர் மலை அடிவாரத்தில் ஜீவ சமாதியில் வீற்றிருக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளோடு  சூட்சுமத்தில் எனக்கு தொடர்பு உண்டு என்பதை சுவாமிகளே என்னிடத்தில்  கடந்த 2000 ம் ஆண்டு வாக்கில் ஒரு அற்புத நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்கள். 
சென்ற பதிவும் சுவாமி சம்பந்தப்பட்ட செய்தியாக அமைந்துவிட்டது. இந்த பதிவும் சுவாமியின் செய்தியாகவே உள்ளது.  சுவாமிகள்  என்னை ஆட்கொண்ட நிகழ்வுகள் குறித்த சம்பவங்களை இந்த வலைப்பூவில் வெளியிட இது தருணம் என்றே உணர்கின்றேன். 
என் வாழ்வில் நிகழ்ந்த பெரும்பாலான அருட்சம்பவங்களை நான் பிறரிடம் அதிகம் விவரிப்பது கிடையாது.  தற்சமயம்  வலையுலகத்தில் சித்தர்கள் தொடர்பான விஷயங்களை பதிவேற்றி வரும்  என் அன்புக்குரியவர்களில் ஒருவர் ,  இக்கலிகாலத்தில்  முப்பத்தாறு தத்துவங்களை அறியாத அருட்சித்தர்கள் நிறைந்த காலகட்டத்தில்  வாழ்வது கொடுமையிலும் கொடுமை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.  அவர் ஆதங்கப்படுவது போல்  தத்துவங்களை அறியாத அருட்சித்தர்களுக்கு நடுவில்  முப்பத்தாறு தத்துவங்களும். தொன்னூற்றாறு தத்துவங்களுக்கும் மேலான இறைநிலையில் ஒன்றத்துடிக்கும்  அருட்சித்தர்களும் உளர் என்றும், அவர்கள் தங்களின் கர்ம கணக்கினை சரிசெய்யவும், அதே சமயத்தில் அண்டியவர்களுக்கு அருளாசி வழங்கிடவும்  பிறவி எடுத்துள்ளனர் என்பதை விரைவில்  இங்கு தெரிவிக்க உள்ளேன்.  
"அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி" என்று வள்ளற்பெருமானார் பாடியுள்ளார். பெருமானார்  கூறுவது போல் பரம்பொருளாகிய அருளாளர் அனைவரின் உள்ளத்தே வருகின்ற தருணம் இது. விழித்திருந்தால் நாம் அனைவரும் தரிசிக்கலாம். 

காலம் நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல். 
என்னைப்ப பொறுத்தவரை  இந்த வலைப்பூவினை இன்னும் சரிவர அமைக்கவில்லை. இன்னும் வருங்காலத்தில் அருளாளர் கூட்டிவைக்கும் காலத்தில் சிறப்புடன் அமையும் என்பதில் வியப்பில்லை.  

என்றும் அன்புடனும். அருளுடனும்
அடியார்க்கும் அடியேன்
அருட்சிவஞான சித்தர் எனும் பா. முருகையன்

செய்தி


அன்புடையீர்,
வருகிற 12.08.2011 வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி - 9.00 மணிக்குள் கட்டிக்குளத்தை சேர்ந்த பட்டமான் கிராமத்தில் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் பிறந்த வீட்டில் சுவாமியின் 154ம் மாநிலத்தில் 12 வது அவதார விழா நடைபெறுகிறது. காலை 11.00 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும். 

அனைவரும் வருக. இறையருள் பெருக.

தொடர்புக்கு
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com
Website: www.soottukkole.org