Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, November 9, 2010

சிவயோகசாரம் 11

சிவயோகசாரம் 10 ன் தொடர்ச்சி..

சுவாசம் என்றால் என்ன?.
சுவாசம் என்பது ஒரு தன்னிச்சை (Automatic)செயல்.

உடல், உயிர் இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பினைந்திருக்க அவசியம் சுவாசம் தேவை.

உடலுள் உயிர் இருக்கின்றதா? உயிருள் உடல் இருக்கின்றதா? என்பதை அவரவர் அனுபவத்தின்கண் கண்டறியலாம்.

மனிதன் ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து இயங்க செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் கொடுத்த சாவியின் வேகம் குறைந்ததும் பொம்மையின் இயக்கம் தன்னாலே நின்றுவிடும்.

அதேபோன்று நம்மை படைத்த இறைவன் நமக்கும், நமது வினைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு விசை கொடுத்து தாயின் கருவறையிலிருந்து,  பூமிப் பந்தில் இறக்கி வைத்து  இயங்க விடுகின்றான். அவன் கொடுத்த விசை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாக இருக்கும். ஒருவருக்கு ஒரு முடுக்கு விசை, மற்றொருவருக்கு இரு முடுக்கு விசை, பிறிதொருவருக்கு மூன்று முடுக்கு விசை, இதேபோன்று பலருக்கும் பல்வேறு வகையில் பலதரப்பட்ட முடுக்கு விசை கொடுத்து தன்னிச்சையாக இயங்க வைத்து வேடிக்கை பார்க்கின்றான். இதற்கு மற்றைய சுவாசித்தலைக் கொண்ட உயிரினங்களும் விதிவிலக்கல்ல.

ஆனால், அவன்கொடுத்த விசையினால் தன்னிச்சையாக இயங்க வைத்ததோடுமின்றி இங்கே மனித இனங்களுக்கென்று தன்னிச்சையாக செயல்படும் புத்தியையும் கூடவே கொடுத்து இயங்க வைத்துள்ளான். அவன் கொடுத்த விசையின் (சுவாசத்தின்) காலம் முடிவதற்குள், தனக்கென்று கொடுத்துள்ள புத்தியைக் கொண்டு நாம் குட்டிக் கரணம் போடலாம், தோப்புக் கரணம் போடலாம், வீர வேசம் காட்டலாம், பிறரை அழிக்க நினைக்கலாம், செல்போன், கம்ப்யூட்டர், நானோ மேட்டர், ரோபோ (அட நம்ம இயந்திரன்தானுங்க) தயாரிக்கலாம். இன்னும் என்னென்னவோ செய்யலாம். அல்லது ஏன் என்னை இப்படி விசை கொடுத்து இயங்க வைத்தாய் என்று இறைவனிடமே அழுது புலம்பி சண்டைக்கும் போகலாம்.
எல்லாம் செய்யலாம். கூடவே நம்ம மேட்டரையும் (சுவாச பயிற்சிதாங்க) சேர்த்து செய்யலாம்.

இறைவன் கொடுத்த விசையின் காலம் முடிவதற்குள் நான் யார் என்பதை அறிந்து பரம்பொருளிடம் சரணாகதி அடைவதுதான் ஒரு வழி.
சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இதைத்தான் சொல்கின்றனர். அப்படி இறைவனிடம் சரண் அடையும் வழிகளில் (மார்க்கங்களில்) இந்த சிவயோகசாரம் தொடரில்  கூறப்படும் வழியும் ஒன்று.
இறைவன் கொடுத்த சாவியின் விசைக்காலம் முடிவதற்குள்,  இறைவனிடம் முழுசரணாகதி அடையாவிட்டால், விசைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் நம்மை கையிலெடுத்து மீண்டும் விசை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பான் இறைவன்.

நிற்க,
மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியில் விடுகிறான் எனவும், இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான் எனவும் நம் முன்னோர்கள் அறிந்து கூறியுள்ளனர்.

எத்தனை நாள் நாம் சுவாசிப்போம் என்று யாராலும் கூறமுடியாது.(விதிவிலக்கு: சித்தர்கள்)

சுவாசம் என்பது அவசியமான ஒன்று.
நான் சுவாசிக்க மாட்டேன் என்று யாராலும் அடம் பிடித்து கூறமுடியாது. (நீங்க அடம் பிடிச்சு சொல்வீங்களா?.)

ஆனால் அந்த சுவாசத்தை (விசையை) முறைப்படுத்தி இறைவன் கொடுத்த விசையின் வேகம் குறைவதற்குள்(ஆயுள் முடிவதற்குள்), நான் யார் ? என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டு, அதன் விடையாக,  நான் பிரம்மத்தின் சொரூபம். ஆனால் நானே பிரம்மம் அல்ல.   எனது தாயும், தந்தையும், சுற்றத்தார் அனைவரும், உலக ஜீவராசிகள் அனைத்தும் அந்த பிரம்மத்தின் சொரூபம்தான் என்பதை அறிந்து, நான் எனும் எனது ஜீவஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாக முயற்சிசெய்வேன்.
ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன்.

//...ரொம்ப பதிவில ஒரே கருத்தை (யோகம்,சரம்) பத்தி லெக்சர் அடிச்சா போரடிக்கும். அதான் கொஞ்சம் ரூட் மாத்தி இந்த பதிவுல தீபாவளி முடிஞ்சவுடன் இப்படி பதிச்சிருக்கேன்.. மறுபடியும் விளையாட அடுத்த பதிவுல வர்றேன்...//

2 comments:

  1. //ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன்// மிக மிக அருமை அய்யா. எவ்வளவு பெரிய விசயத்த சும்மா நச்சுனு சொல்லிடீங்க. உங்களுக்கெல்லாம் ஆண்டவன் இரண்டாவது வாய்பெல்லாம் கொடுக்க மாட்டார். இந்த ஜென்மத்திலேயே பிறப்பில்லாத நிலையை எட்டிவிடுவீர்கள் என்று நம்புகிறேன். நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  2. @ Jagadeesh
    மிக்க நன்றி!
    உங்களது கருத்துக்கள் உண்மையில் நிறைவேற நான் கடும்முயற்சிகள் எடுக்கின்றேன்.
    நான் கடைசியாக சுவாசிப்பது் இறைவனின் அருகிலாக இருக்கவேண்டும்.
    இறைவனே என்னருகில் வந்து உனது விளையாட்டை நானே முடித்துவைக்கின்றேன் என்று கூறி என்னை தன்னோடு அழைத்து கொள்ளவேண்டும் என்பது விருப்பம்(என் வாழ்நாள் லட்சியம்).
    (ஞானிகள், சித்தர்களின் வாழ்வில் இது உண்மை நிகழ்வு)

    எனது கடைசி சுவாசத்தின் முன் சுவாசம் வரை அதற்காக நான் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்.
    நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
    "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் "

    ReplyDelete