இந்த அருட்சிவம் வலைப்பதிவில் "அருட்சிவம்" "அருட்சிவம்01" பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு நான் கற்றுணர்ந்தவைகளை உலக மக்களுக்கு எடுத்துக்கூறி எல்லவர்களையும் ஆன்மீக இன்பத்தில் திளைக்கச் செய்யும் நோக்கில் ''சிவயோகசாரம்'' எனும் நூலில் உள்ள விடயங்களை, தங்களுக்கு மேற்படி நூலில் உள்ளவாறும் சில இடங்களில் தற்காலத்தில் நடைமுறையில் உள்ள உரைநடை வாசகப்படியும், சில இடங்களில் எனது அனுபவங்களை இடைஇடையே கூறவும், எல்லாம் வல்ல அருட்சிவத்தின் துணைக்கொண்டும், சித்தர்களின் ஆசியோடும், நூலாசிரியர் பூரணாநந்தர் ஆசியோடும் முயற்சிக்கின்றேன். இந்த பதிவுகளில் / தொடரில் எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகின்றேன். எனது இந்த முயற்சி வெற்றிபெற இதனை பார்வையிடும் வாசகர்களாகிய நீங்கள் தங்களது கருத்துரைகளை அனுப்ப வேண்டுகின்றேன். இந்நூல் (சிவயோகசாரம்) தொடர்பாக முன்னரே யாரேனும் வலைப்பதிவில் கூறியிருந்தால் அவ்வலைப்பதிவினை எனக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.
பூராணனந்தர் அருளிச் செய்த
சிவயோகசாரம்
சிறப்புப் பாயிரம்
அவையடக்கம்
சிவயோகசாரம்
சிறப்புப் பாயிரம்
அவையடக்கம்
'கனக வரை' என்னும் புருவத்திடை நடன ஒளி கேட்டானந்திக்கும் எந்தைமார்களே, உங்கள் பாதபங்கட்கு அனந்த வந்தனம்! அறிவிற் சிறியேன் குருமுகமாய் ஹிந்துஸ்தானியால் உணர்ந்த ராஜயோக மார்க்கத்தைப் பல நூல்களிலுள்ள அரும்பொருளொடு 'சிவயோகசாரம்' என வரைதலுற்றேன். நீரைப்பிரித்துப் பாலைக்கொள்ளும் அன்னத்தைப் போலக் குற்றம் தவிர்த்துக் குணத்தைக் கொள்ளக்கோருகின்றேன்.
அறுசீர் விருத்தம்
ஏத முற்ற பேதையேன் இயம்பு மிந்த யோகநூல்
பேத மற்ற போதமுற்றோர் பேசுவார்க ளாசையால்
வேத னைப்பட் டுழலு வாரிம் மெய்யுணராப் பொய்யரிப்
பூத லத்தி லுள்ளதீது புதுமை யன்று புலவிர்காள்.
நீர்வளம் முதலியவகைளால் சிறப்புற்றோங்கும் உத்தர தேசங்களில் பஞ்சாபு என்னும் பாஞ்சால தேசத்தில் அவதரித்தவராய், ஜீவேசுவர பேதாபேத முணர்ந்து நித்தியானுபவம் செய்யுங் பரம யோகீந்திரராய் ஸ்ரீஜனகாம்ஸ பூதரான உதாசி பாபா நானக் குரு பரம்பரையினர் அனேக வருட காலமாக அனுபவித்து வரும் இராஜயோகக் கிரமத்தை அச்சங்கத்திலொருவரும் ஞானசிரேஷ்டரும் தயாளகுண பரிபூரணருமான குரு சரண்தாஸ் பாபாஜி அவர்களால் இந்துஸ்தானி பாஷையில் உபதேசிக்கப்பெற்று, ஸ்ரீமத் நாராயண தேசிகர் நியமனத்தினால் இந்தத் தட்சிண தேசத்திலுள்ள சகல வருணாச்சிரமிகளும் உய்யும் பொருட்டுத் தமிழில் மொழி பெயர்த்து உபநிஷத்துகளிலும், யோகவாசிஷ்டம் பதஞ்சலியம், அடயோகம் முதலியவகைளிலுமுள்ள அரும்பொருளைச் சேகரித்துச் "சிவயோகசாரம்" என நற்பெயரமைத்து இதனை வெளியிடலாயிற்று.
இந்நூலைச் சாங்கோபாங்கமாக உணரும் புண்ணியர்கள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளை அடைவரென்பது திண்ணம்.
அடுத்த பதிவில் குருவணக்கம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் திருவடிகளே போற்றி! பூரணானந்தர் திருவடிகளே போற்றி!