Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, October 31, 2011

கசவனம்பட்டி சித்தர்


கசவனம்பட்டி சித்தர்
ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 

29வது குரு பூஜைவிழா நாள் : 31-10-2011


கடந்த ஒரு வாரத்திற்கு முன்,  நான் ( வள்ளலார் தெய்வ நிலைய) அலுவலகப்பணியில் இருந்தபோது அன்பர் ஒருவர் நன்கொடை அளிக்கும் பொருட்டு அவரது ஊர் முகவரியை குறிப்பிட்டிருந்தார். முகவரியில் பழங்காநத்தம், மதுரை என்றிருந்தது.  மதுரை என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தமான  உணர்வு  ஏற்படும். ஏனெனில், அந்த ஊரின் ஆன்மீக சக்தியை நான் மிக நன்கு உணர்ந்திருப்பவன். நன்கொடை கொடுக்க வந்த அன்பரிடம் மேலும் ஆன்மீக விஷயமாக பேச்சு கொடுத்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சித்தர்கள் ஜீவசமாதி கோயில்களை பற்றி சென்றது.  பேச்சு இடையில், திண்டுக்கல் பக்கத்தில் உள்ள கசவனம்பட்டி சித்தர் கோயிலுக்கு போயிருக்கின்றீர்களா? என்று அந்த அன்பர் கேட்டார். இல்லைங்க என்று நான் பதில் கூறினேன். 
மேலும் அவரிடம் அந்த சித்தர் பற்றி கேட்டதற்கு, அவர் எனக்கு முழுவிபரம் தெரியாது எனது நண்பர் அடிக்கடி சென்று வருவார் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் சென்றதிலிருந்து எனக்கு ஒரே தவிப்பு. கசவனம்பட்டி சித்தர்னா யார் அவர்? அவர் ‍எப்படி இருப்பார்? அவரின் வாழ்க்கை வரலாறு என்ன ? என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. சரி நெட்டில் தேடிப் பார்ப்போம் என்று நினைத்து, தேடாமலேயே விட்டுவிட்டேன்.  மூன்று நாட்கள் கழிந்திருக்கும். பணி நிமித்தமாக எனது அலுவலக நிர்வாக அதிகாரியின் அறைக்கு சென்றேன். அங்கு நிர்வாக அதிகாரியுடன் விழுப்புரம் & கடலூர் மாவட்ட ஆலய நிலங்களுக்கான தனித்துணை ஆட்சியர்( ஓய்வு) அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.   மின்வெட்டு காரணமாக,  தனித்துணை ஆட்சியர் அவர்கள் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு விசிறிக்கொண்டிருந்தார்கள். விசிறிக்கொண்டிருந்த பேப்பரில் ஒரு உருவம் அசைந்தபடி இருந்தது. என் மனதில் ஒரு உருத்தல்.  சார் அந்த பேப்பரை கொஞ்சம் கொடுங்கள் என்றேன். அவர் பண்பாளர். உடன் கொடுத்துவிட்டார். வாங்கி அந்த உருவத்தை பார்த்தேன். மறு பக்கம் பார்த்தால் ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 29வது குரு பூஜைவிழா என்றிருந்தது.  சற்று அதிர்ந்து விட்டேன். எந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து மூன்று நாட்களாக தவித்திருந்தேனோ,  அந்த சித்தரின் 29வது ஆண்டு குருபூசைப் பத்திரிக்கையின் கிழிந்த ஒரு பகுதிதான்  அது என்பதை அறிந்து எனக்கு தாங்கொணா மகிழ்ச்சி. பத்திரிக்கையின் இரண்டு பக்கங்கள் தான் இருந்தது. மீதி பக்கங்கள் இல்லை.   தனித்துணை ஆட்சியரிடம் ஐயா இந்த பத்திரிக்கை ஏது என்று வினவினேன். இங்கதாம்பா கிடந்தது என்றார். மீதி பத்திரிக்கை எங்கே என்று கேட்டேன். எனக்கு தெரியாது என்று பதிலளித்தார். உடன் கிழிந்த பத்திரிக்கையை புரட்டி பார்த்தபோது கடைசியில் சித்தர்கோயிலின் வெப்சைட் முகவரி அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த முகவரிக்கு இணையத்தில் சென்று பார்த்தபோது குருபூஜை பற்றிய  முழுவிபரம் தெரிந்தது. சித்தரின் ஜீவசமாதி இருப்பிடம் பற்றிய  விபரமும் தெரிந்தது. 



இந்த நிகழ்வின் மூலம் கசவனம்பட்டி சித்தரின் அருளாற்றலை எளிதில் என்னால் உணர முடிந்தது. யாரோ ஒரு அன்பரின் மூலம் கசவனம்பட்டி சித்தர் என்று கேள்விப்பட்டு, அவரைப்பற்றிய  விபரத்தை ஒரு கிழிந்த பத்திரிக்கையின் மூலம் தனித்துணை ஆட்சியரின் கையில் அசைந்ததின் மூலம் , நீ என்னைத் தேடவேண்டாம் நான் இங்கிருக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி, அருளிச் செய்த விதம் என்னை  வியப்பில்  ஆழ்த்தியது. 
எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல்  அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும். இது எனது பல்வேறு அனுபவத்தில் உண்மையாக நான் கண்டது. 
மறுமுறை நான் மதுரை செல்லும் போது அப்படியே திண்டுக்கல் சென்று கசவனம்பட்டி சித்தரின் ஜீவசமாதிக்கு சென்று வரவேண்டும் என்று எண்ணியுள்ளேன். அவரின் அருளாசி கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவோமாக. 


ஏன் இந்த சித்தர் நிர்வாணமாக இருந்தார்?. நிர்வாணத்தின் தாத்பரியம் என்ன? இந்து மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்புகள் உள்ளதா? இந்தியாவில் உள்ள பிற மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்பு என்ன? இந்து மதம் நிர்வாணத்தை ஒப்புக்கொள்கின்றதா? என்பதை பிற்பாடு சமயம் வரும்போது பார்ப்போம். 


கசவனம்பட்டி சித்தர் திருக்கோயில் 
இணைய தள முகவரி www.kasavanam-siddhar.org

( இந்த பதிவினை நேற்றே (30.10.11 அன்று) பதிவிட இருமுறை முயற்சித்தும் சில தடைகளால் மு‍டியவில்லை. தற்போதுதான் முடிந்தது) 

Wednesday, October 26, 2011

தீபாவளி நல்வாழ்த்துகள்

எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசியோடு தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.
தீமை ஒழியட்டும். நன்மை பெருகட்டும். 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்





Saturday, October 1, 2011

அருட்சித்தர்- தீர்க்கதரிசி- மாயாண்டி சுவாமிகள்- 81ம் ஆண்டு குரு பூஜை- திருக்கூடல் மலை


அருட்சித்தர்- தீர்க்கதரிசி- மாயாண்டி சுவாமிகள்- 81ம் ஆண்டு குரு பூஜை- திருக்கூடல் மலை
.........................................................

அருட்சித்தரான மாயாண்டி சுவாமிகள் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று திருவருள்  பெற்று அற்புதங்கள் பல ஆங்காங்கே நிகழ்த்திக் காட்டியருளினார்கள். தென்பதிகளை அவர் தரிசிக்கச் சென்றபோது அப்போதைய இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியும்,  சுவாமிகளை வரவேற்று நல்லாசியும் வாழ்த்துக்களும் பெற்றார்கள். அனைவராலும் சற்குரு மாயாண்டி சுவாமிகள் என போற்றப்பட்ட இவர் கட்டிக்குளத்திற்கு மேற்கே கருப்பனேந்தலில் தியானத்திருமடம் ஒன்றை உருவாக்கியருளினார்கள். அம்மண்டபம் ஞானபீடமாகப் புகழ் பெற்றது. பின்பு செளமிய ஆண்டு (1909) பங்குனி மாதம் விளாச்சேரி இ.பெரியசாமி வாத்தியார்,  விராட்டிபத்து பொன்னையா சுவாமிகள் ஆகியோருக்கு நல்லாசிகள் வழங்கி, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் அருள்பாலித்தார்கள்.
திருக்கூடல் மலையில் கட்டிக்குளம் அருள்மிகு மாயாண்டி சுவாமிகள் அருளாசி 
அருட்சித்தரான சுவாமிகள் திருக்கூடல் மலையை அ‍டைந்த மறுநாள் அதிகாலையில் சரவணப் பொய்கையில் நீராடி, அங்கே மண் எடுத்து, லிங்கமாகச் செய்து பூசை செய்தார்கள். பின்பு மலையின் மேல் பக்கத்தில் உள்ள குகை ஒன்றில்  அதனை ஆகம விதிப்படி வைத்து வழிபட்டார். அங்கேயே தங்கி தம்மை நாடிவரும் மெய்ஞ்ஞான அன்பர்களுக்கு மெய்ஞ்ஞான வாழ்வையும், உலகியல் பேறு  வேண்டுவோருக்கு சகல செல்வங்களையும் அருளாசியோடு வழங்கத்தொடங்கினார்கள். 
(ஆதாரம்-  மாயாண்டி சுவாமிகள் திருக்கூடல்மலை தலவரலாறு )
..........................................

(அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் வேண்டுவோருக்கும், உலகியல் துன்பம் நீங்கி இன்பம் வேண்டுவோருக்கும், வேண்டியதை வேண்டியபடியே  இன்றும் அரூப வழங்கியருளுகின்றார் மாயாண்டி சுவாமிகள்.  நீங்களும் ஒருமுறை திருக்கூடல் மலைக்கு சென்று சுவாமியின் சன்னதிக்கு சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து விட்டாலும் இன்றும் என்னுடன் அரூபமாக தொடர்புகொண்டு அருளாசி செய்து வருகின்றார்கள். மானுடர்களின் பிறவிக் கணக்கை துல்லியமாக அறியக்கூடியவர் மாயாண்டி சுவாமிகள். நான் இந்தப்பிறவி எடுக்கும் முன்பாக வான்வெளியில் சுவாமிக்கு நான் கொடுத்த வாக்கை, இப்புவியில் நான் பிறவி ‍எடுத்த பிறகு, அவரின் இருப்பிடத்திற்கே,  2000 ம் ஆண்டு வாக்கில் (காந்தம் இரும்பை கவர்வது போல்) என்னைக் கவர்ந்து, அழைத்து, நினைவுபடுத்தி, "வந்து விட்டாயே" என்று கூறி அருளாசி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி குறித்து பிறிதொரு நேரம் பதிவிடுகின்றேன்.
இந்த சம்பவத்தின் காரணகர்த்தர்களுள்,  மாயாண்டி சுவாமிகள் திருக்கோயிலுக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் அருள்மிகு சிவப்பிரகாச சுவாமிகளும், மேற்படி சிவப்பிரகாச சுவாமிகள் திருக்கோயிலின் தற்போதைய நிர்வாகி திரு. செளந்தர்ராஜனும் ஆவார்கள். மாயாண்டி சுவாமிகள் சன்னதிக்கு செல்பவர்கள், அருகிலுள்ள சிவப்பிரகாச சுவாமிகள் சன்னதிக்கும் சென்று வாருங்கள். 

திருக்கூடல் மலையின் மீது உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னர், கடந்த 31.08.2011 அன்று முதல் முறையாக மதுரை நண்பர் ராம் (ராமசுப்பிரமணியன்) அவர்களுடன் மலையின் மீது செல்லும் அருட்பேறு எனக்கு கிடைத்தது.  ஆராவாரம் நிறைந்த மதுரை நகருக்கு அருகில் இப்படி ஒரு அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த திருக்கூடல் மலை என்னை ஆச்சரியப்படுத்தியது.  இந்த மலையில் ஆழ்நிலை தியானம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற ‍சூழல் நிறையவே உள்ளது. எண்ணற்ற சித்தர்களின் அருளாற்றல் நிறைந்துள்ளதை உணரமுடியும். மலையின் மீதிருந்து பார்த்தால் மீனாட்சியம்மன் சன்னதியின் 
நான்கு கோபுரங்களும் தெளிவாக தெரிகின்றது. இங்கிருந்தே சொக்கநாதரையும், மீனாட்சியம்மனையும் சேவித்து மகிழலாம். மதுரை நகரின் ஆராவாரத்தில் எரிச்சலடைபவர்களும், பணிகளுக்கு இடையே ஆன்மீக சாதகம் செய்பவர்களும், வார இறுதி நாட்களில் இம்மலைக்கு சென்று மனமகிழ்ச்சி அடையலாம்.  ) 

கட்டிக்குளம் அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் 81ம் ஆண்டு குருபூஜை விழா மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுவாமியின் ஜீவசமாதி திருக்கோயிலில் 02.10.2011  அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியின் அருள்பெற வேண்டுகின்றேன். 

மேலும் செய்திகள் அறிய 
சுவாமியின் அருளுக்கு பரம்பரை பாத்தியப்பட்ட 
( உண்மையிலேயே எனக்கு பொறாமையாக இருக்கின்றது)
அன்புச் சகோதரர் திரு. ஆர். தட்சிணாமூர்த்தி அவர்கள‍ை தொடர்பு கொள்ளலாம். 

முகவரி :
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com
Website: www.soottukkole.org
*******************************************
திருக்கூடல் மலையின்மீது 31.08.2011 அன்று அலைபேசி மூலம் எடுத்த புகைப்படங்களை கீ‍ழே காண்க. 

மலையின் மீதுள்ள அபூர்வ மூலிகை

தியானக் குகையின் முன்பிருந்து மீனாட்சி அம்மன் கோயில் தோற்றம்

தியானக் குகையின் முன் நான் 

மலையிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் தோற்றம்

மலையிலிருந்து தோற்றம்



திருக்கூடல் மலையில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் 



மலையிலிருந்து - தியாகராஜர் பொறியியல் கல்லூரி தோற்றம்