Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, November 8, 2011

கோரக்க சித்தர் குருபூஜை


 கோரக்க சித்தர் குருபூஜை - நாள் : 10.11.2011


ஒவ்வொரு தமிழ் ஐப்பசி மாதமும் (பெளர்ணமி) பரணி நட்சத்திரத்தில் மகான் கோரக்க சித்தரின் குருபூஜை விழா நடைபெறும் என்பது சித்தர்களை பூஜிப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அது போன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூகாசாபரூர் ( பரூர்பட்டி) ஊரிலுள்ள கோரக்கரின் ஜீவசமாதி ஆலயத்திலும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. (மேற்படி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதாக அன்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்).
இந்த ஐப்பசி பெளர்ணமியன்று அருட்சிவஞான பீடத்தில் பெளர்ணமி பூஜை, பிரார்த்தனை, வேள்வி நடைபெற உள்ளதால், என்னால் எங்கும் செல்ல இயலவில்லை. இந்த பெளர்ணமி இரவில் கோரக்க சித்தரின் திருவடியைப் பிடித்துக்கொண்டு வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளேன். இறைச்சித்தமும், சித்த சித்தமும் அருள் புரிய வேண்டும். 
நான் சித்தர்கள் வழியில் நிற்பதால்,  கோரக்க சித்தரோடு அவ்வப்போது தொடர்பு கொண்டு அருளாசி பெற்று வருவது வழக்கம். இதற்கிடையில் , நேற்றைய தினம் ( 07.11.2011) வடலூரில் சத்திய ஞானசபைக்கு அருகில் உள்ள ஒரு புத்தகக்கடையில் சித்தர்கள் தொடர்பான புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கும் போது, பாட்டுச்சித்தர் ஓம் சக்தி நாராயண சாமி அவர்கள் எழுதிய ஸ்ரீகோரக்க சித்தர் கதையும் கருத்தும் ( கோரக்கர் அருளிய சந்திர ரேகை 200 மூலமும் உரையும்) என்ற நூல் கிடைத்தது. அதில் கோரக்க சித்தரின் வரலாறு மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
மேலும் சந்திர ரேகை 200 -க்கு தெளிவுரையும் மிகுந்த கருத்துச்செறிவுடன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  சித்தர்கள் வழிபாடு செய்பவர்கள்  அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டிய நூல் இது ஆகும்.  சித்தரின் குருபூஜையை ஒட்டி இந்த நூல்கிடைத்தது எனக்கு மிக மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நில்லாமல்,  இன்று 08.11.2011 ல் வடலூர் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞானசபைக்கும்,  சத்திய தருமச்சாலைக்கும் கன்னியாகுமரி பால பிரஜாபதி அடிகளார் (அய்யாவழி) வருகை தந்திருந்தார்கள். அவர் வரும் சமயம் நான் கோரக்கரின் சந்திர ரேகை 200 நூலினை படித்துக்கொண்டிருந்தேன். உடனடியாக அடிகளாரிடம் சந்திர ரேகை 200 நூலில் தங்களின் கையொப்பம் இட்டு தரும்படி கேட்டு, அப்படியே அவரும் நூலில் கையெழுத்திட்டு கொடுத்து என்னைப்பற்றி விபரங்களை கேட்டு அறிந்து, ஆசியும் வழங்கினார். அடிகளாரிடம் ஆசி பெற்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. 
நிற்க, வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தரின் குருபூ‍ஜை விழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று லட்சக்கணக்கான அன்பர்கள் அவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் பாட்டுசித்தர் ஓம் சக்திநாராயணசாமி அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், எந்த ஒரு விஷயத்தை இந்த வலைத்தளத்தில் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதனைப்பற்றி இணையத்தில் search செய்துவிட்டுதான் பதிவெழுத ஆரம்பிப்பேன். கோரக்கர் சித்தர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கும் குறிப்பிடலாம் என்று நான் நினைத்திருந்ததால், அதற்கு வேலையே இல்லாமல் எனக்கு முன்பே சில அன்பர்கள் வலையுலகத்தில் பதிவேற்றியுள்ளார்கள். அவர்களுக்கு இறைவனும், சித்தர்களும் சகல சித்திகளையும், சக்திகளையும், அருளையும் அளிப்பார்கள் என்று எண்ணலாம். வரும் பதிவுகளில் கொல்லி மலை பயணத்தின் போது, கோரக்கர் குகை சென்று வந்தது ( மிகசுவராசியமான, ஆன்மீகமான)  குறித்து பதிவேற்ற முயற்சிக்கின்றேன். இறைவனும் சித்தர்களும் அருள்புரியவேண்டும். 

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த விபரங்களை, அந்ததந்த தளத்தின் முகவரியை கொடுத்துள்ளேன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 
( முன்னரே இந்த பதிவுகளை படித்தவர்கள் தவிர்த்துவிடலாம். )

 1. கோரக்கர் பற்றிய சில தகவல்கள் 
http://18siddhar.blogspot.com/2011/11/blog-post.html
மேற்காணும் இனணப்பில் வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தரின் ஜீவசமாதி புகைப்படம் உள்ளது. 
அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.

2. சித்தர்கள் வரலாறு-10
http://vs-sk.blogspot.com/2011/07/10.html
இந்த தளம் சித்தர்கள் வரலாறு பற்றி கூறுகின்றது. இதில் கோரக்க சித்தரின் வரலாறும் உள்ளது.  

3. ராசி நக்ஷத்ரம் ஏற்ற சித்தர் திருத்தலங்கள்
http://bhogarsiddhar.blogspot.com/2011_01_01_archive.html
இந்த பதிவு நான் தேடியதில் ஆச்சர்யப்பட வைத்தது.  ராசி நட்சத்திரத்திற்கேற்ப வழிபடவேண்டி சித்தர் தலங்கள் குறித்து ஒரு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 
இதில் எனது பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி க்கு குறிப்பிட்டுள்ள ஸ்தலத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம். எந்த மதுரையை நோக்கியும், சுந்தரானந்த சித்தரை நோக்கியும், திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர் ஸ்தலத்தை நோக்கியும் நான் செல்கின்றேனோ அதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்லாடம்பட்டி பற்றி நான் இதுவரை அறியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன். 
நீங்களும் உங்களுக்கேற்ற ராசி நட்சத்திரத்தின்படி பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பிடப்பட்டுள்ளவை உங்களுக்கு சரியாக வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். அனைத்து 

சித்தர் ஜீவசமாதிகளையும் தரிசித்து ஆனந்தம் கொள்ள ஏதுவாக இருங்கள். சித்தர்களின் கருணைப்பார்வை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். 

Monday, October 31, 2011

கசவனம்பட்டி சித்தர்


கசவனம்பட்டி சித்தர்
ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 

29வது குரு பூஜைவிழா நாள் : 31-10-2011


கடந்த ஒரு வாரத்திற்கு முன்,  நான் ( வள்ளலார் தெய்வ நிலைய) அலுவலகப்பணியில் இருந்தபோது அன்பர் ஒருவர் நன்கொடை அளிக்கும் பொருட்டு அவரது ஊர் முகவரியை குறிப்பிட்டிருந்தார். முகவரியில் பழங்காநத்தம், மதுரை என்றிருந்தது.  மதுரை என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தமான  உணர்வு  ஏற்படும். ஏனெனில், அந்த ஊரின் ஆன்மீக சக்தியை நான் மிக நன்கு உணர்ந்திருப்பவன். நன்கொடை கொடுக்க வந்த அன்பரிடம் மேலும் ஆன்மீக விஷயமாக பேச்சு கொடுத்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சித்தர்கள் ஜீவசமாதி கோயில்களை பற்றி சென்றது.  பேச்சு இடையில், திண்டுக்கல் பக்கத்தில் உள்ள கசவனம்பட்டி சித்தர் கோயிலுக்கு போயிருக்கின்றீர்களா? என்று அந்த அன்பர் கேட்டார். இல்லைங்க என்று நான் பதில் கூறினேன். 
மேலும் அவரிடம் அந்த சித்தர் பற்றி கேட்டதற்கு, அவர் எனக்கு முழுவிபரம் தெரியாது எனது நண்பர் அடிக்கடி சென்று வருவார் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் சென்றதிலிருந்து எனக்கு ஒரே தவிப்பு. கசவனம்பட்டி சித்தர்னா யார் அவர்? அவர் ‍எப்படி இருப்பார்? அவரின் வாழ்க்கை வரலாறு என்ன ? என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. சரி நெட்டில் தேடிப் பார்ப்போம் என்று நினைத்து, தேடாமலேயே விட்டுவிட்டேன்.  மூன்று நாட்கள் கழிந்திருக்கும். பணி நிமித்தமாக எனது அலுவலக நிர்வாக அதிகாரியின் அறைக்கு சென்றேன். அங்கு நிர்வாக அதிகாரியுடன் விழுப்புரம் & கடலூர் மாவட்ட ஆலய நிலங்களுக்கான தனித்துணை ஆட்சியர்( ஓய்வு) அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.   மின்வெட்டு காரணமாக,  தனித்துணை ஆட்சியர் அவர்கள் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு விசிறிக்கொண்டிருந்தார்கள். விசிறிக்கொண்டிருந்த பேப்பரில் ஒரு உருவம் அசைந்தபடி இருந்தது. என் மனதில் ஒரு உருத்தல்.  சார் அந்த பேப்பரை கொஞ்சம் கொடுங்கள் என்றேன். அவர் பண்பாளர். உடன் கொடுத்துவிட்டார். வாங்கி அந்த உருவத்தை பார்த்தேன். மறு பக்கம் பார்த்தால் ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 29வது குரு பூஜைவிழா என்றிருந்தது.  சற்று அதிர்ந்து விட்டேன். எந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து மூன்று நாட்களாக தவித்திருந்தேனோ,  அந்த சித்தரின் 29வது ஆண்டு குருபூசைப் பத்திரிக்கையின் கிழிந்த ஒரு பகுதிதான்  அது என்பதை அறிந்து எனக்கு தாங்கொணா மகிழ்ச்சி. பத்திரிக்கையின் இரண்டு பக்கங்கள் தான் இருந்தது. மீதி பக்கங்கள் இல்லை.   தனித்துணை ஆட்சியரிடம் ஐயா இந்த பத்திரிக்கை ஏது என்று வினவினேன். இங்கதாம்பா கிடந்தது என்றார். மீதி பத்திரிக்கை எங்கே என்று கேட்டேன். எனக்கு தெரியாது என்று பதிலளித்தார். உடன் கிழிந்த பத்திரிக்கையை புரட்டி பார்த்தபோது கடைசியில் சித்தர்கோயிலின் வெப்சைட் முகவரி அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த முகவரிக்கு இணையத்தில் சென்று பார்த்தபோது குருபூஜை பற்றிய  முழுவிபரம் தெரிந்தது. சித்தரின் ஜீவசமாதி இருப்பிடம் பற்றிய  விபரமும் தெரிந்தது. 



இந்த நிகழ்வின் மூலம் கசவனம்பட்டி சித்தரின் அருளாற்றலை எளிதில் என்னால் உணர முடிந்தது. யாரோ ஒரு அன்பரின் மூலம் கசவனம்பட்டி சித்தர் என்று கேள்விப்பட்டு, அவரைப்பற்றிய  விபரத்தை ஒரு கிழிந்த பத்திரிக்கையின் மூலம் தனித்துணை ஆட்சியரின் கையில் அசைந்ததின் மூலம் , நீ என்னைத் தேடவேண்டாம் நான் இங்கிருக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி, அருளிச் செய்த விதம் என்னை  வியப்பில்  ஆழ்த்தியது. 
எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல்  அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும். இது எனது பல்வேறு அனுபவத்தில் உண்மையாக நான் கண்டது. 
மறுமுறை நான் மதுரை செல்லும் போது அப்படியே திண்டுக்கல் சென்று கசவனம்பட்டி சித்தரின் ஜீவசமாதிக்கு சென்று வரவேண்டும் என்று எண்ணியுள்ளேன். அவரின் அருளாசி கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவோமாக. 


ஏன் இந்த சித்தர் நிர்வாணமாக இருந்தார்?. நிர்வாணத்தின் தாத்பரியம் என்ன? இந்து மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்புகள் உள்ளதா? இந்தியாவில் உள்ள பிற மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்பு என்ன? இந்து மதம் நிர்வாணத்தை ஒப்புக்கொள்கின்றதா? என்பதை பிற்பாடு சமயம் வரும்போது பார்ப்போம். 


கசவனம்பட்டி சித்தர் திருக்கோயில் 
இணைய தள முகவரி www.kasavanam-siddhar.org

( இந்த பதிவினை நேற்றே (30.10.11 அன்று) பதிவிட இருமுறை முயற்சித்தும் சில தடைகளால் மு‍டியவில்லை. தற்போதுதான் முடிந்தது) 

Wednesday, October 26, 2011

தீபாவளி நல்வாழ்த்துகள்

எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசியோடு தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.
தீமை ஒழியட்டும். நன்மை பெருகட்டும். 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்





Saturday, October 1, 2011

அருட்சித்தர்- தீர்க்கதரிசி- மாயாண்டி சுவாமிகள்- 81ம் ஆண்டு குரு பூஜை- திருக்கூடல் மலை


அருட்சித்தர்- தீர்க்கதரிசி- மாயாண்டி சுவாமிகள்- 81ம் ஆண்டு குரு பூஜை- திருக்கூடல் மலை
.........................................................

அருட்சித்தரான மாயாண்டி சுவாமிகள் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று திருவருள்  பெற்று அற்புதங்கள் பல ஆங்காங்கே நிகழ்த்திக் காட்டியருளினார்கள். தென்பதிகளை அவர் தரிசிக்கச் சென்றபோது அப்போதைய இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியும்,  சுவாமிகளை வரவேற்று நல்லாசியும் வாழ்த்துக்களும் பெற்றார்கள். அனைவராலும் சற்குரு மாயாண்டி சுவாமிகள் என போற்றப்பட்ட இவர் கட்டிக்குளத்திற்கு மேற்கே கருப்பனேந்தலில் தியானத்திருமடம் ஒன்றை உருவாக்கியருளினார்கள். அம்மண்டபம் ஞானபீடமாகப் புகழ் பெற்றது. பின்பு செளமிய ஆண்டு (1909) பங்குனி மாதம் விளாச்சேரி இ.பெரியசாமி வாத்தியார்,  விராட்டிபத்து பொன்னையா சுவாமிகள் ஆகியோருக்கு நல்லாசிகள் வழங்கி, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் அருள்பாலித்தார்கள்.
திருக்கூடல் மலையில் கட்டிக்குளம் அருள்மிகு மாயாண்டி சுவாமிகள் அருளாசி 
அருட்சித்தரான சுவாமிகள் திருக்கூடல் மலையை அ‍டைந்த மறுநாள் அதிகாலையில் சரவணப் பொய்கையில் நீராடி, அங்கே மண் எடுத்து, லிங்கமாகச் செய்து பூசை செய்தார்கள். பின்பு மலையின் மேல் பக்கத்தில் உள்ள குகை ஒன்றில்  அதனை ஆகம விதிப்படி வைத்து வழிபட்டார். அங்கேயே தங்கி தம்மை நாடிவரும் மெய்ஞ்ஞான அன்பர்களுக்கு மெய்ஞ்ஞான வாழ்வையும், உலகியல் பேறு  வேண்டுவோருக்கு சகல செல்வங்களையும் அருளாசியோடு வழங்கத்தொடங்கினார்கள். 
(ஆதாரம்-  மாயாண்டி சுவாமிகள் திருக்கூடல்மலை தலவரலாறு )
..........................................

(அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் வேண்டுவோருக்கும், உலகியல் துன்பம் நீங்கி இன்பம் வேண்டுவோருக்கும், வேண்டியதை வேண்டியபடியே  இன்றும் அரூப வழங்கியருளுகின்றார் மாயாண்டி சுவாமிகள்.  நீங்களும் ஒருமுறை திருக்கூடல் மலைக்கு சென்று சுவாமியின் சன்னதிக்கு சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து விட்டாலும் இன்றும் என்னுடன் அரூபமாக தொடர்புகொண்டு அருளாசி செய்து வருகின்றார்கள். மானுடர்களின் பிறவிக் கணக்கை துல்லியமாக அறியக்கூடியவர் மாயாண்டி சுவாமிகள். நான் இந்தப்பிறவி எடுக்கும் முன்பாக வான்வெளியில் சுவாமிக்கு நான் கொடுத்த வாக்கை, இப்புவியில் நான் பிறவி ‍எடுத்த பிறகு, அவரின் இருப்பிடத்திற்கே,  2000 ம் ஆண்டு வாக்கில் (காந்தம் இரும்பை கவர்வது போல்) என்னைக் கவர்ந்து, அழைத்து, நினைவுபடுத்தி, "வந்து விட்டாயே" என்று கூறி அருளாசி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி குறித்து பிறிதொரு நேரம் பதிவிடுகின்றேன்.
இந்த சம்பவத்தின் காரணகர்த்தர்களுள்,  மாயாண்டி சுவாமிகள் திருக்கோயிலுக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் அருள்மிகு சிவப்பிரகாச சுவாமிகளும், மேற்படி சிவப்பிரகாச சுவாமிகள் திருக்கோயிலின் தற்போதைய நிர்வாகி திரு. செளந்தர்ராஜனும் ஆவார்கள். மாயாண்டி சுவாமிகள் சன்னதிக்கு செல்பவர்கள், அருகிலுள்ள சிவப்பிரகாச சுவாமிகள் சன்னதிக்கும் சென்று வாருங்கள். 

திருக்கூடல் மலையின் மீது உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னர், கடந்த 31.08.2011 அன்று முதல் முறையாக மதுரை நண்பர் ராம் (ராமசுப்பிரமணியன்) அவர்களுடன் மலையின் மீது செல்லும் அருட்பேறு எனக்கு கிடைத்தது.  ஆராவாரம் நிறைந்த மதுரை நகருக்கு அருகில் இப்படி ஒரு அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த திருக்கூடல் மலை என்னை ஆச்சரியப்படுத்தியது.  இந்த மலையில் ஆழ்நிலை தியானம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற ‍சூழல் நிறையவே உள்ளது. எண்ணற்ற சித்தர்களின் அருளாற்றல் நிறைந்துள்ளதை உணரமுடியும். மலையின் மீதிருந்து பார்த்தால் மீனாட்சியம்மன் சன்னதியின் 
நான்கு கோபுரங்களும் தெளிவாக தெரிகின்றது. இங்கிருந்தே சொக்கநாதரையும், மீனாட்சியம்மனையும் சேவித்து மகிழலாம். மதுரை நகரின் ஆராவாரத்தில் எரிச்சலடைபவர்களும், பணிகளுக்கு இடையே ஆன்மீக சாதகம் செய்பவர்களும், வார இறுதி நாட்களில் இம்மலைக்கு சென்று மனமகிழ்ச்சி அடையலாம்.  ) 

கட்டிக்குளம் அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் 81ம் ஆண்டு குருபூஜை விழா மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுவாமியின் ஜீவசமாதி திருக்கோயிலில் 02.10.2011  அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியின் அருள்பெற வேண்டுகின்றேன். 

மேலும் செய்திகள் அறிய 
சுவாமியின் அருளுக்கு பரம்பரை பாத்தியப்பட்ட 
( உண்மையிலேயே எனக்கு பொறாமையாக இருக்கின்றது)
அன்புச் சகோதரர் திரு. ஆர். தட்சிணாமூர்த்தி அவர்கள‍ை தொடர்பு கொள்ளலாம். 

முகவரி :
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com
Website: www.soottukkole.org
*******************************************
திருக்கூடல் மலையின்மீது 31.08.2011 அன்று அலைபேசி மூலம் எடுத்த புகைப்படங்களை கீ‍ழே காண்க. 

மலையின் மீதுள்ள அபூர்வ மூலிகை

தியானக் குகையின் முன்பிருந்து மீனாட்சி அம்மன் கோயில் தோற்றம்

தியானக் குகையின் முன் நான் 

மலையிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் தோற்றம்

மலையிலிருந்து தோற்றம்



திருக்கூடல் மலையில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் 



மலையிலிருந்து - தியாகராஜர் பொறியியல் கல்லூரி தோற்றம்




Monday, August 22, 2011

நன்றிகள் பல - அருட்சிவமாகிய பரம்பொருளுக்கும், வாழ்த்தியவர்களுக்கும்.




நாம் திட்டமிட்டு செய்யும் காரியம்
எதிர்பாராமல் தோல்வியடையும்போது நமது மனம் சோர்வுறுகின்றது.

அதே சமயம் திட்டமிடாமல் செய்யும் காரியும் வெற்றியடையும் போது மனம் கர்வம் அடைகின்றது.


ஆனால் திட்டமிட்ட காரியம்
திட்டமிட்டதை விட சிறப்பாக அமையும் போது மனம் இறைவனின் அருளாற்றலை நினைத்து ஆனந்தப்படுகிறது. இப்படித்தான் குழந்தை யோகியின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் நல்லபடியாக, திட்டமிட்டதைவிட சிறப்பாக (முந்தைய பதிவில் கூறியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி) இறைவன் அருளால் நடந்தது.


 திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் சிங்கபுரி பதிகம் பாடிய
குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் அருள்மிகு சுப்புராயர் சன்னதியில்
37வருடங்களுக்கு முன் எனது பிறந்த நாளை முன்னிட்டு இரவு 8.50 மணியளவில் வேள்வியுடன் கூடிய சிறப்பு ஆராதனையுடன் எனது முதல் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

 எனது தகப்பனார் 40 வருடங்கள்  பல சிவபூசைகள் செய்து வரம்
இருந்து, பிறந்தவன் நான்.


எனது தகப்பனார் 40 வருடங்களுக்கு
மேலாக எத்தனையோ அன்பர்களுக்கு தமது கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தவர். அவர்களுக்கு எல்லாம் குழந்தை பாக்கியம் உடனே உண்டானது. ஏனோ, இறைவன் இவருக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் கருணை காட்டவில்லை. 

எனது தகப்பனாரின் முதல் மனைவி 25 வருடங்கள் குழந்தைப் பேறு
இல்லாமல் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியாகிய எனது தாயாருக்கு 15 வருடங்கள் குழந்தை இல்லை. இவர் சிறந்த முருக பக்தர். உறங்கப் போனாலும் முருகா, விழித்தாலும் முருகா என்று எந்த நேரமும் பழனிமலை ஆண்டவனை அழைப்பவர்.

நான் எனது தகப்பனாரின் 70 வது வயதில் பிறந்தவன் . எனக்கு எட்டு வயதாகும் போது எனது தகப்பனார் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அருளாளர்கள் பிறப்பின் ரகசியத்தை
அந்த இறைவனும், ஞானபுருஷர்களும் மட்டுமே  அறிந்த ஒன்று.


இந்த அருளாளனை அறிந்த ஞானபுருஷர்களும் உண்டு.

இதன் விபரம் பின்னிட்டு நேரம் வரும்போது பதிவேற்றுகின்றேன்.

( இதனை சிலர் தம்பட்டம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான்
பொருட்படுத்தப்போவதில்லை.)

என்னை அறிந்து, என்னுடன் நட்பு
பூணும் அன்பர்களுக்கு என்னளவில் நான் அறிந்த ஞானவிடயங்களை சத்திய
தர்மத்தோடு, பொய்யின்றி உண்மையாக தெரிவிப்பேன். இதனை அறிந்து பயன்பெறுவது என்பது அந்தந்த ஆத்மாக்களின் பூர்வ புண்ணியத்தை பொறுத்தது.


ஒருவருக்கு புத்திர பாக்கியம்
என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்தே அமையும். நல்ல ஆத்மாக்கள்  சிறந்த ஒழுக்கமுள்ள தாய் தந்தையருக்கு பிறக்கும். அவ்வாறே, ஒழக்கமுள்ள தாய் தந்தையருக்கு நல்ல ஆத்மாக்கள் குழந்தையாக பிறக்கும். இவ்வகையில் எனது தம்பி மகன் யோகியின் ஜாதகத்தில் சில நல்ல அம்சங்கள் உள்ளது. எனது தந்தையாரின் குணாதியசத்தை போன்றே அமைவான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால்தான் எனது தாயாரின் அறிவுரைப்படி அவனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு சிலவிடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது மகள் காயத்ரி பிறந்தது
01.07.2000 சனிக்கிழமை 

ஆனி அமாவாசை.

( எனது குருநாதர் சித்திபெற்றது ஆனி அமாவாசை)மிருக சீரட நட்சத்திரம். கடக லக்கினம். லக்கினத்தில் கேது. 12 ம் மிடத்தில் ராகு, குரு , சனி தவிர்த்து ஏனைய ஐந்த கிரகங்கள் அமைந்துள்ளது. )

எனது மகன் குருபிரகாஷ் பிறந்தது
01.02.2003 சனிக்கிழமை 

தை அமாவாசை.

திருவோண நட்சத்திரம். இருவருமே ஒன்றாம் தேதி, சனிக்கிழமை, அமாவாசையில் பிறந்தவர்கள்.

(சோதிடவியல்படி அமாவாசையை நான்கு
பாகமாக பிரித்து பலன் காணுவது மரபு.)  


நிற்க,

சிவயோகசாரம் தொடருக்கு ரிவிசன் செய்ய வேண்டும், என் ஞானவாழ்வில் சம்பந்தப்பட்ட திருப்பரங்குன்றம் சற்குரு மாயாண்டி சுவாமிகள் பற்றி கூற வேண்டும். சுருளிமலை சித்த அனுபவங்கள் பற்றி கூறவேண்டும். ‍கொல்லிமலை சித்த அனுபவங்களைப் பற்றி கூறவேண்டும். மதுரை
மீனாட்சியம்மன் அருளினைப் பற்றி கூறவேண்டும். 

அனானி கந்தசாமி அவர்களுக்கு பதில்
சொல்லவேண்டும் (போகர் நவபாஷாண முருகன் சிலை செய்தது குறித்து) 

இன்னும் எத்தனையோ வேண்டும் உள்ளது.

நான் முழுநேர கணினிப் பணியாளர் என்பதால் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்து பார்த்து கண்கள் சோர்ந்துவிடுகிறது. கைகளும் டைப்பிங் செய்வதால் அசந்து விடுகின்றது. எனது பணி அறநிலையத்துறை சார்ந்ததால் எந்த நேரம் பார்த்தாலும் ஏதேனும் ஒரு திருக்கோயிலுக்கு நான் பணி செய்வதாகவே அமைந்து விடுகின்றது.
இதனையும் தெய்வீக காரியமென்றே நினைத்து சந்தோஷமாக செய்கின்றேன்.


இதற்கிடையில் நெட் connection க்கு
என்று வாங்கிய நோக்கியா போனும் போனவாரத்தில் சிம்மோடு தொலைந்துவிட்டது.
பிராட்பேண்டும் நோ. நண்பரிடமிருந்து பெற்ற nokia 7210 supernova செல்
மூலம் இப்ப நேரம் ஒடிக்கிட்டிருக்கு.

(இந்த மாடல் நல்லாயிருக்கு. ஆனா இப்ப வெளிவருவது இல்லை.)

 கடந்த ஒரு வாரமாக போஸ்ட் பப்ளிஷ், கமென்ட்ஸ் பப்ளிஷிங், மின்னஞ்சல்
பார்ப்பது எல்லாம் இந்த செல்லில்தான்.


இப்படி பலதரப்பட்ட எனது சூழ்நிலையில் பதிவுகள் சரியாக இடமு‍டியவில்லை. வீட்டில் உள்ள  PC யின் பழுதினை நீக்கி விட்டால் சற்று சிரமம் குறையும். இதற்கெல்லாம் அந்த மகாதேவனின் கருணை வேண்டும். பார்ப்போம் அவன் திருவிளையாடலை.



மீண்டும் நிற்க,

முந்தைய பதிவில் பின்னூட்டத்தின் மூலம் குழந்தை யோகிக்கு ஆசியையும், வாழ்த்தையும்
தெரிவித்திருந்த  திரு. இறைவனடி யுவராஜா, 

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி, 

எனது அன்பிற்குரிய ஜெகதீஷ்

ஆகியோர்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும், நேரில் கலந்துகொண்டு ஆசிர்வதித்த பெரியோர்களுக்கும், இவைகள் எல்லாவற்றையும் நல்லவிதமாக நடப்பித்த பரம்பொருள் அருட்சிவத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் பல.



சென்ற பதிவில் குழந்தையை கையில்
வைத்திருப்பதும் நானே.


இந்த பதிவில் வேள்வி செய்பவனும்
நானே.


சில நேரத்தில் Tools &
Software சகிதம் கம்ப்யூட்டரை குடைபவனும் நானே.


அப்பப்ப நம்ம கெட்டப் மாறும்.   உலகமே ஒரு நாடக மேடைன்னு பெரியவங்க சொல்லியிருப்பது சரிதானுங்க?.



BirthDay Function Cell
Photos  கீ‍ழே:






நான் பூஜைப் பணி செய்யும் சித்திவிநாயர் கோயிலின் கர்ப்ப கிரகம். 
இந்த கர்ப்பகிரகத்தில்தான் நான் தியானிப்பது வழக்கம். 





Friday, August 19, 2011

ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள்



ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள்

இன்று 19.08.2011 ம் நாள் ஒரு யோகியின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் ஆகும்.
அந்த யோகி எனது தம்பியின் மகன் ஆவார்.
(இந்த பதிவினையும் படியுங்கள்)
இன்றைய தினம் இக்குழந்தையின் பிறந்த நாளினை முன்னிட்டு எங்களது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், அன்னதானமும், யோகியின் பிறந்த நேரம் இரவு 7.30க்கு வேள்வியும், உடன் தீப ஆராதனையும் நடைபெறும்.


(கோவை உயரியல் பூங்காவில் அலைபேசியில் எடுத்த புகைப்படம்)
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைதான் யோகி.  முழுப்பெயரே யோகி தான். பிறந்தது மூலம் நட்சத்திரம் 2ம் பாதம். கும்ப லக்கினம். பஞ்சமத்தில் கேது.  சப்தம ஸ்தானம் சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன்.

ஒரு ஆன்மாவிற்கு கிடைக்கும் ஆசிதான் வாழ்வின் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால், இக்குழந்தையை ஆசிர்வதிக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Thursday, August 18, 2011

அருட்சிவஞான பீடம்


அருட்சிவஞான பீடம்

நான்காம் ஆண்டு துவக்கம்.

நிகழும் கர ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் அருட்சிவஞானபீடத்தின் நான்காம் ஆண்டு துவக்க நாளாகும்.
கடந்த சர்வதாரி ஆண்டு ஆவணித்திங்கள் 1 ம் நாள் ( 17.08.2008ல்) உலகிற்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவான் தமது ஆட்சி வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாளன்று இப்பீடம் இறையருளால் துவக்கப்பட்டது. இப்பீடத்தால் மிகப்பெரிய அளவில் ஆன்மீகப் பணிகள் நடைபெறாவிட்டாலும் என் அளவில் சிற்சில ஞானப்பணிகள் நடைபெற்றுள்ளது.
அதில் ஒன்று மிகப்பழமையான சிவன் கோயிலுக்கு நந்தி எம்பெருமான் கற்சிலா விக்ரகம் (அவன் அருளாலே அவன் தாள் பணிந்து) அமைத்துக் கொடுத்தது. அந்தக் கோயிலின் சிவலிங்க வடிவம்தான். இந்த வலைப்பூவின் லோகோவில் அமைந்துள்ளது ஆகும். இத்திருக்கோயிலுக்கு நந்தி‍யெம்பெருமான் சிலா விக்ரகம் வந்த விபரம் பின்னர் ஒரு பதிவில் தெரிவிக்கின்றேன்.
இந்த அருட்சிவஞான பீடம் செயல்பாட்டின் பொருட்டு நான் பூசை செய்து வரும் எனது ஊர் சித்திவிநாயகர் திருக்கோயிலின் நிர்வாகத்தார் வசம் சில அனுமதி மற்றும் நிபந்தனை உறுதிமொழி குறித்தான விபரங்களை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தின் PDF நகல் இதோ கீழே இணைத்துள்ளேன். சுட்டி படிக்கவும்.


இக்கடிதத்திற்கு ஊர் மக்களிடமிருந்தும், கோவில் நிர்வாகம் வசமிருந்தும் அனுமதி அப்பொழுது கிடைத்ததின் பொருட்டு பீடமும் ‍செயல்பட்டு வருகின்றது.
இப்பீடத்தின் அருட்செயல்பாடுகள் குறித்தான விபரங்கள் பின்னிட்டு நேரம் இருக்கும்போது பகிர்கின்றேன்.

Thursday, August 11, 2011

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 12 அவதார தினவிழா செய்தியுடன் ஒரு செய்தி


கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 12 அவதார தினவிழா செய்தியுடன் ஒரு செய்தி


திருப்பரங்குன்றம் காகபுஜண்டர் மலை அடிவாரத்தில் ஜீவ சமாதியில் வீற்றிருக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளோடு  சூட்சுமத்தில் எனக்கு தொடர்பு உண்டு என்பதை சுவாமிகளே என்னிடத்தில்  கடந்த 2000 ம் ஆண்டு வாக்கில் ஒரு அற்புத நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்கள். 
சென்ற பதிவும் சுவாமி சம்பந்தப்பட்ட செய்தியாக அமைந்துவிட்டது. இந்த பதிவும் சுவாமியின் செய்தியாகவே உள்ளது.  சுவாமிகள்  என்னை ஆட்கொண்ட நிகழ்வுகள் குறித்த சம்பவங்களை இந்த வலைப்பூவில் வெளியிட இது தருணம் என்றே உணர்கின்றேன். 
என் வாழ்வில் நிகழ்ந்த பெரும்பாலான அருட்சம்பவங்களை நான் பிறரிடம் அதிகம் விவரிப்பது கிடையாது.  தற்சமயம்  வலையுலகத்தில் சித்தர்கள் தொடர்பான விஷயங்களை பதிவேற்றி வரும்  என் அன்புக்குரியவர்களில் ஒருவர் ,  இக்கலிகாலத்தில்  முப்பத்தாறு தத்துவங்களை அறியாத அருட்சித்தர்கள் நிறைந்த காலகட்டத்தில்  வாழ்வது கொடுமையிலும் கொடுமை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.  அவர் ஆதங்கப்படுவது போல்  தத்துவங்களை அறியாத அருட்சித்தர்களுக்கு நடுவில்  முப்பத்தாறு தத்துவங்களும். தொன்னூற்றாறு தத்துவங்களுக்கும் மேலான இறைநிலையில் ஒன்றத்துடிக்கும்  அருட்சித்தர்களும் உளர் என்றும், அவர்கள் தங்களின் கர்ம கணக்கினை சரிசெய்யவும், அதே சமயத்தில் அண்டியவர்களுக்கு அருளாசி வழங்கிடவும்  பிறவி எடுத்துள்ளனர் என்பதை விரைவில்  இங்கு தெரிவிக்க உள்ளேன்.  
"அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி" என்று வள்ளற்பெருமானார் பாடியுள்ளார். பெருமானார்  கூறுவது போல் பரம்பொருளாகிய அருளாளர் அனைவரின் உள்ளத்தே வருகின்ற தருணம் இது. விழித்திருந்தால் நாம் அனைவரும் தரிசிக்கலாம். 

காலம் நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல். 
என்னைப்ப பொறுத்தவரை  இந்த வலைப்பூவினை இன்னும் சரிவர அமைக்கவில்லை. இன்னும் வருங்காலத்தில் அருளாளர் கூட்டிவைக்கும் காலத்தில் சிறப்புடன் அமையும் என்பதில் வியப்பில்லை.  

என்றும் அன்புடனும். அருளுடனும்
அடியார்க்கும் அடியேன்
அருட்சிவஞான சித்தர் எனும் பா. முருகையன்

செய்தி


அன்புடையீர்,
வருகிற 12.08.2011 வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி - 9.00 மணிக்குள் கட்டிக்குளத்தை சேர்ந்த பட்டமான் கிராமத்தில் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் பிறந்த வீட்டில் சுவாமியின் 154ம் மாநிலத்தில் 12 வது அவதார விழா நடைபெறுகிறது. காலை 11.00 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும். 

அனைவரும் வருக. இறையருள் பெருக.

தொடர்புக்கு
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com
Website: www.soottukkole.org




Friday, July 29, 2011

செய்திகள்


ஆடி அமாவாசை விழா


திருப்பரங்குன்றம் திருகூடல்மலை (புசுண்டர்மலை) மீது அமைந்துள்ள அருள்மிகு சோமப்பா ஜீவசமாதியில் 30.07.2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அருள்மிகு சோமப்பா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் மஹா தீபாராதனை நடைபெறும்.

தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


மாயாண்டி சுவாமிகளின் அருளாசி பெற்ற தவத்திரு க.இருளப்பகோனார் குரு பூஜை

நாள்: 31.07.2011 ஞாயிறு காலை 10 மணி.

அனைவரும் வருக. இறையருள் பெருக.

தொடர்புக்கு :  
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com  Website: www.soottukkole.org

Saturday, July 16, 2011

சிவயோகசாரம் 18


சிவயோகசாரம் 18
சிவயோகசாரம் 17ன் தொடர்ச்சி...
இப்பஞ்சதத்துவத்தைக் கண்டறிவதற்கு விவரம் சொல்லுவோம்.
1- வது தத்துவங்களின் நடை;
2-வது சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்:
3- வது சுவாசத்தினால் தத்துவத்தின் அடையாளம்;
4- வது தத்துவங்களின் நிறம்;
5 வது தத்துவங்களின் சுவை;
6 வது சுவாசத்தின் அளவு;
7வது தத்துவங்களின் அசைவு;
8 வது தத்துவங்களின் பலன்.
ஆகிய இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். 

மாணாக்கன் எந்த வாயுவில் எந்தத் தத்துவம் நடக்கிறதோ, அதனை கண்டறிய வேண்டும். மேலும், முக்கியமாகக் கவனிக்க வேண்டுவது பஞ்சேந்திரியங்களைச் சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு, தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அப்பியாசிக்க வேண்டும். அதிகமாக அப்பியாசித்தால் அசெளக்கியம் நேரிடும். குரு எவ்வளவு பிரமாணஞ் சொல்லுவாரோ, அவ்வளவுதான் நடக்கவேண்டும்.

(1)இந்த சண்முகி முத்திரையை மூடிக்கொண்டு அப்பியாசிக்கும் காலத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் பிருதிவி என்றும், வெண்ணிறம் தோன்றினால் அப்பு என்றும், சிவப்பு நிறம் தோன்றினால் தேயுவென்றும், பச்சை நிறம் தோன்றினால் வாயுவென்றும், கறுப்பு நிறம் தோன்றினால் ஆகாயமென்றும் சொல்லப்படும்.
(2) மாணாக்கன் கண்ணாடியைத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அதன்மேல் சுவாசத்தை விட்டால், அது நாற்சதுரமாக இருந்தால் பிருதிவி என்றும், அரையுருண்டை வடிவமாக இருந்தால் அப்புவென்றும், முக்கோணமாக இருந்தால் தேயுவென்றும், அறுகோண உருண்டை வடிவமாக இருந்தால் வாயுவென்றும், சிறுபுள்ளிகள் மாதிரியிருந்தால் ஆகாயமென்றும் அறிய வேண்டும்.
(3) மாணாக்கன் சுவாசம் விடும்போது சுவாசம் நேராகப் போனால் பிருதிவி, கீழாகப்போனால் அப்பு, மேலாகப்போனால் தேயு, ஒழுங்கீனமாய்போனால் வாயு, அடங்கிப்போனால் ஆகாசமென்று அறிய வேண்டும்.
(4) பிருதிவி -மஞ்சள், அப்பு- வெண்மை, அக்கினி- சிவப்பு, வாயு -பச்சை , ஆகாயம்- கருப்பு என இவைகளை கண்டறிய வேண்டும்.

தொடரும். ...


Thursday, July 14, 2011

சிவயோகசாரம் 17


சிவயோகசாரம் 17

சிவயோகசாரம் 16 ன் தொடர்ச்சி....
பஞ்ச தத்துவ நிலை

இனி, சூட்சும பஞ்சாட்சர தியானத்தின் ஆதாரமாகிய பஞ்ச தத்துவங்களைக் குரு சம்பிரதாயத்தால் அறிய வேண்டியதும், அந்தப் பஞ்ச தத்துவங்களின் குறிப்புகளின் விவரணமுங் கூறப்படும். அதாவது முன் சொன்ன மூன்ற நாடிகளின் குணங்களையும் சுத்தமாக அறிந்துகொண்டு ஒன்றை ஒன்றில் மாற்றிக் குண்டலியை அடையாமல் தத்துவங்களை அப்பியசிக்கலாகாது. முதலிற் சொல்லி இருக்கின்ற நாடிகளை தன் வசப்படுத்திக் கொள்ளாமல், யோகிகள் தத்துவங்களை குறித்து ஆரம்பிக்கப்பட்டது. போஜனம், மலம் கழித்தல், போகஞ் செய்தல் இவை மூன்றும் சூரிய நாடியில் செய்ய வேண்டுபவை. தாகம் ஜலவிருத்தி இவைகளை இடகலையில் செய்ய வேண்டும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களும் மூன்று நாடிகளில் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே வருகின்றன. இந்த தத்துவங்களைக் கண்டறிவதற்கு அடியில் வருமாறு கூறுவோம்.
அதாவது எவர்கள் இந்த மூன்று வாயுக்களை அப்பியசித்திருக்கிறார்களோ, அவர்கள்தாம் இந்த யோகத்திற்குரியவர்கள். இந்த உலகம் பஞ்சபூதத்தால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. இதனை கண்டுகொள்பவருக்கு ஆயுள் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்கள், பூஜை முதலாகிய உபசாரங்கள் செய்யப்பெற்று மேலாவார்கள்.
இந்து ஐந்து தத்துவங்களும் சத்திய லோகம், பூலோகம், மிருத்தியுலோகம் முதலாகிய இடங்களில் வியாபித்திருக்கின்றன. அவைகட்கு அன்னியமாக ஒரு வஸ்துவும் ஏற்படாது.

தொடரும்....

Thursday, February 24, 2011

சிவயோகசாரம் 16


சிவயோகசாரம் 15 ன் தொடர்ச்சி ...
அஜபாவின் நிலை

இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பத்மாசனமிட்டு உட்கார்ந்து அஷ்டகந்த தூபமிடவேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது, மிக்க நலமாக இருக்க வேண்டும். தான் தனியேதான் இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக் காலமாவது வைத்துக் கொண்டு அப்பியாசிக்க வேண்டும்.
இருநாசித்துவாரங்களிலிருந்து வெளியே வருகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஹம்" என்பதையும் உள்ளே போகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஸம்" ( சிலர் இதனை ‍"ஸோ" என்றும் கூறுவர்) என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த "ஹம்ஸம்" ( "ஸோஹம்") என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன், இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன் ஆவான். இந்த அப்பியாசம் செய்பவர்கள் உலக ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளவேண்டும். ஒரேயடியாக குறைக்க கூடாது.
ஏன் எனில், ஒரு வருட காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடும் என்பதால், நாளுக்கு நாள் கொஞ்ச கொஞ்சமாக நீக்க வேண்டியது. சாதகர் கூடிய அளவு மனதை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாக தன்னுடைய சுவாசத்தைக் குறித்து, அதனால் உண்டாகும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும். இப்படி அப்பியாசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறிய வேண்டியது.
மூன்று நாடிகளைக் கண்டறியாமல், பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக் கூடாது. இந்த யோகம், அப்பியசித்து ஜீரணசக்தியை உணர்ந்து தேகத்தைப் பலப்படுத்தவேண்டும். அதாவது அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, துவரை உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரை வயிறு அன்னமும், கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். ஏன் எனில், உள் வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டுமென்று உணர்க.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக்கூடாது. இத்தன்மைப்பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் குடும்பத்தினரும், செல்வந்தர்களும், ஏழைகளும், ஜாதி பேத, நிற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை. எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தைச் செய்வார்களோ அவர்களுக்கு இவை சித்திக்கும் என்பது நிச்சயம்.
ஒருவன் பதினெட்டு வயதில் இந்த அப்பியாசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். (செய்யும் பயிற்சியினைப் பொறுத்து காலங்கள் சாதகருக்கு சாதகர் வேறுபடும்) இத்தன்மையான யோகி மது, மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி, ராஜஸ, தாமஸ குணங்களற்று, தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து, அதிதீவிரபக்குவமாய் வாழ்வான்.
 
தொடரும்...

Tuesday, February 1, 2011

பர்வத மலைப் பயணம்



முந்தைய பர்வதமலை குறித்தான பதிவு நான் எதேச்சையாக பதிந்தது.
அதன்பின்னர் பர்வதமலை பயணம் குறித்து விளக்கங்கள் கேட்டு  சில மின்னஞ்சல் வரப்பெற்றதில் உருவானது இந்த பயணக்கட்டுரை. 
மின்னஞ்சல் அனுப்பிய எனது அன்புக்குரிய ஸ்ரீலங்கா (டென்மார்க்)அன்பருக்கும் மற்றுமுள்ள அன்பருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.
( நீங்கள் தூண்டிவிட்டால் சுடர்விட நான் தயார்)

பர்வதமலை

அம்பாளின் அருளைப்போன்றே மிக வசீகரமான பெயரைக்கொண்ட இந்த மலையைப்பற்றி நான்  கேள்விப்பட்ட வருடம் 1994. அப்போது என்னுடைய வயது 21. வசித்த இடம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.. ரோடு. வண்ணாரப்பேட்டையிலிருந்து பர்வதமலை யாத்திரைக்குழு என்ற அமைப்பிலிருந்து மாதாமாதம் பர்வதமலைக்கு சென்று வருவார்கள். அவர்களிடம் பர்வதமலையைப்பற்றிய விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டதுண்டு. நானும் கொல்லி மலை, சுருளிமலை, வள்ளி மலை, சதுரகிரி மலை,  வெள்ளியங்கிரி மலை, சேலம் அருகில் உள்ள சித்தர் மலையினை முன்பே கேள்விபட்டிருந்தேன். ஆனால் பர்வதமலையைப்பற்றியும் அதன் அருளாற்றலைப் பற்றியும் அச்சமயம்தான் நான் அறிந்தேன். கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்"த்தில் பல்வேறு மலைகளைப்பற்றியும் பல்வேறு மூலிகைகளைப்பற்றியும் குறிப்புகள் உள்ளது. (இந்தநூல் அப்போது என்னிடம் இருந்தது). இந்த பர்வதமலையை நான் கேள்விப்பட்ட பிறகு சுருளிமலை, கொல்லிமலை, வள்ளிமலை போன்ற மலைத்தளங்களுக்கு பலமுறை சென்று வந்துவிட்டேன்.
ஆனால் 15 வருடங்களுக்கு பிறகு சென்ற ஆண்டுதான் பரம்பொருளின் அருளால் சென்று வரமுடிந்தது. 
எந்த ஒரு மலையாயினும் பரம்பொருளின் அருளாலும், சித்தர்களின் ஆசியாலும், திவ்யமான சித்தர்கள் வாசம் செய்யும் மலையில் நமது விதிப்பயன்படிதான் நாம் காலடி எடுத்து வைக்கமுடியும். நாம் நினைத்ததும் எந்த மலைக்கும் சர்வ சாதாரணமாக சென்று வந்து விட முடியாது. ( சிலர் சுற்றுலாப் பயணமாக வேண்டுமானால் சென்று வந்துவிடலாம் அது வேறு.) 
சென்னையிலிருந்து எனது பூர்வீகமான வடலூருக்கு வந்தவுடன் சென்னையிலுள்ள ஆன்மீக நண்பர்களின் தொடர்பு சற்று காலம் இல்லாமல் இருந்தது. வடலூர் வந்தவுடன் இங்கும் புதியதாக ஒரு ஆன்மீக நண்பர்கள் வட்டம் ஆரம்பமானது. மூன்று வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜப் பெருமானின் அருளாலும், நான் பூசித்து வரும் சித்தி விநாயகர் அருளாலும், சித்தர்களின் ஆசியாலும் அருட்சிவஞான பீடம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு அதன் முதல் ஆன்மீகப் பயணமாக பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான திருவானைக்கா (நீர்), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருச்சி உச்சி பிள்ளையார்கோயில், பழனி ஆகிய ஸ்தலங்களுக்கு எனது அண்ணனை ( சித்தி மகன்) ஓட்டுநராகக் கொண்டு டூரிஸ்டர் வேனில் சென்று வந்தோம்.  இந்த பயணத்தின் போது பல்வேறு மலைப்பயணங்களைப்பற்றி பேசிக்கொண்டு வந்த போது எனது அண்ணன் ஏதேச்சையாக '..முருகா நீ பர்வதமலை போயிருக்கீயா?'
என்று கேட்டார். எனது பதில் '..இல்லண்ணா இந்தமலைக்கு போக மட்டும் அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு வரமாட்டேங்குது '. என்றேன். அவர் சிரித்தார். ஏண்ணா சிரிக்கிறீங்க என்றதற்கு அவரின் பதில்.. '..நீ பல மலைக்கு போயிருக்க. இந்தமலைக்கு போகலை. நாங்க வருடத்திற்கு ஐந்து ஆறுமுறை பர்வத மலைக்கு சென்று வருகிறோம். போனமாதம்தான் போய்விட்டு வந்தோம் என்றார். சரி நான் அடுத்த முறை பர்வத மலைக்கு செல்லும்போது உனக்கு தகவல் சொல்றேன் என்றார்.
அவரும் அவருடன் பணியாற்றும் மற்ற வேன் ஓட்டுநர்களும் கடலூரிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வேனை எடுத்துக்கொண்டு  பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவது போல் ஒட்டுமொத்த வேன் ஓட்டுநர்களின் இஷ்ட தெய்வமான பர்வதமலை மல்லிகார்ஜூனேஸ்வரரை மலையேறி தரிசித்துவிட்டு வந்துவிடுவார்கள்.
முன்பு அவர் கூறியதைப் போல் ஒருமாதம் கழித்து போனில் 'நாளை பர்வதமலை போகிறோம் வா' என்றார். இந்த சமயத்தில் எனக்கு வைரஸ் சுரம் வந்து ஒரு மாதமாக படுத்த படுக்கையாக இருந்தேன். சாயந்திரம் ஆச்சுன்னா சும்மா குளிர்சுரம் வந்து ஆட்டு ஆட்டுன்னு ஆட்டும். என்னடா இது சோதனை இந்த நேரத்தில இவர் கூப்பிடுறார்னு நினைச்சு எனது நிலைமைய அவரிடம் சொல்லிட்டு நான் வரலைண்ணா என்று கூறிவிட்டேன்.
வாய்தான் வரலைன்னு சொல்லிச்சு. மனம் " நீ போக நினைச்ச பர்வதமலைக்கு போக பதினைந்து வருடம் கழித்து அற்புதமான வாய்ப்பு வருது போறியா? இல்லையா?" ன்னு  கிடந்து அலறுது. ஒரு நாள் முழுவதும் எனது உடல்நிலையை குறித்து இந்த மனப்போராட்டம். இறுதியாக புறப்படும் நாள் அன்று மாலை 4 மணிக்கு எனது அண்ணனுக்கு போன் செய்து நானும் இன்னொரு தம்பியும் வர்றோம் வேனில் சீட் இருக்கான்னு கேட்டு, சீட் இருக்கு என்ற செய்தி கேட்டு மனம் குதியாலம் போட்டது. இன்னும் கொஞ்ச நேரத்துல பர்வதமலைக்கு புறப்படப் போறாம்ன்ற சந்தோஷத்துல சுரம் அடிக்கறது கூட பெரியதாகப் படல எனக்கு. உடனே எனது ஒன்றுவிட்ட தம்பி அருணாசலத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு வடலூரிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் கடலூரில் வேன் முன்னர் ஆஜராகிட்டோம்.
இனி நாங்கள் பர்வதமலைக்கு சென்ற விபரத்தை இங்கு பார்ப்போம்.
கடலூரிலிருந்து எனது அண்ணனுடன் வேன் மூலம் அவர்களுடைய நண்பர்களுடன் (12 நபர்கள்) இரவு 9.30 மணியளவில் புறப்பட்டோம். திருவண்ணாமலை, கடலாடி வழியாக பர்வதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தை இரவு 1 மணியளவில் அடைந்தோம். அடிக்கடி செல்லும் விபரம் தெரிந்தோர் மட்டும் இந்த வழியில் செல்வர்.( ெதன்மாதி மங்கலம் வழியாக பிரதான படிக்கட்டு பாதை உண்டு).
நாங்கள் சென்றது விசேஷ நாள் அல்ல.
வேனை விட்டு இரங்கியவுடன் தூங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்கார பெண்மணியை எழுப்பி அந்த நேரத்திலும் தேநீர் போடச்சொல்லி வாங்கிக் குடித்தவுடன் தூக்க கலக்கம் ஓடிப்போச்சு.
அடுத்தது அண்ணனிடம் என்னவென்று விசாரித்தால் குளித்துவிட்டுத்தான் மலையேற வேண்டும். நாங்க குளிக்கப் போறாம். நீ வண்டியில இரு சுரம் விட்டு விட்டு அடிக்கறதால குளிக்க வேண்டாம் என்றார்.
எனக்கு மனம் கேட்கவில்லை. ஒரு புனிதமான மலையில் இருக்கும் சர்வேஸ்வரனை தரிசிக்க செல்லும் போது சுத்தமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. மேலும் நான் லிங்கதாரணம் (ஆத்ம லிங்கம் அணிந்திருப்பது)கொண்டவனென்பதால் சுத்தபத்தமாக பூஜை செய்வது தினசரி கடமைகளில் ஒன்று.
அண்ணனிடம் நானும் குளிக்க வர்றேன் என்று கூறிவிட்டு அவருடன் ஆசிரமத்திற்கு பின்புறம் சென்றேன்.
அங்கே குறைவாக ஒரு பைப்பில் வந்த தண்ணீரில் ஆளுக்கு ஒரு பக்கெட் வீதம் பிடித்து (ஊத்திக்கொண்டு)குளித்து விட்டு வந்து மறுபடியும் ஒரு டீயடிச்சிட்டு, தண்ணீர்பாக்கெட், பிஸ்கட் இன்னபிற பூஜை இத்யாதிகளுடன் டார்ச் லைட் சகிதம் இரவு 2 மணி அளவில் காலில் செருப்பு அணியாமல் (செருப்பு அணியக்கூடாது)மலையேற ஆரம்பித்தோம்.
அர்த்த ராத்திரியில நான் குளிச்ச இடம் ஒன்னு சபரிமலை. இரண்டாவது இந்த பர்வதமலைதான்.

கல்லும் முள்ளும் கொண்ட சற்று கடினமான பாதையாக இருந்தது.போகும்போதே ஒரு சூரை முள் காலில் குத்தி வலியேற்படுத்திவிட்டது. அத்துடன் நடக்கும்போது முள் குத்திய இடத்தில் பாறைக்கற்கள் படும்போது மேலும் வலி ஏற்பட்டது.
(இந்த சமயத்தில் நெஞ்சில் நான் அணிந்திருந்த ஆத்மலிங்கத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டும், வலியின் வேகத்தைக் குறைக்க சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டும் சென்றதை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை. (எவர் ஒருவருக்கு சோதனைகள் நேருகின்றதோ அவர்கள் இறைவனின் நாமத்தை ஜெபித்துக்கொண்டே அச்சோதனையை வெல்லவேண்டும். இறைவன் அடியார்களிடம் விளையாடும் திருவிளையாட்டில் இதுவும் ஒன்று )    

(மலையேற மற்றுமொரு வழி உள்ளது அது அடிவாரத்திலிருந்து பாதிதூரம் வரை படிக்கட்டால் ஆனது. இந்த வழியும் நாங்கள் சென்ற வழியும் ஒரு இடத்தில் சங்கமித்து பின் இரண்டு வழியும் ஒன்றாக செல்லும். )

வழியில் சில இடங்களில் 10 நிமிடம் வீதம் ஓய்வெடுத்தோம். (அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்.)
கடைப்பாறை படியைத் தாண்டியவுடன் பின்னால் வருபவர்களுக்காக சிறிது நேரம் காத்திருந்தோம். அதிகாலை மணி 4.30 இருக்கும் மலையிலிருந்து கீழே பார்வையை செலுத்தினேன். நாங்கள் இருந்த இடத்திற்கும் கீழே  மலையைச்சுற்றி மேகங்கள் மிக வெண்மையாக, சந்திரனின் ஒளி பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது. ( சினிமாவில்
ஐஸ்புகை சூழ காட்டுப்படும் தேவலோகம் போன்று இருந்தது. விமானத்தில் போகும்போது இந்த காட்சி கிடைக்குமோ? என்னவோ? )
எனக்கு மட்டும் அப்ப றெக்கை இருந்ததுன்னா சும்மா ஒரு டைவ் அடிச்சி அந்த மேகக்கூட்டத்துல ஒரு பூந்து பூந்து ஆசை தீர விளையாடிட்டு வந்திருப்பேன். ( இந்த இடத்தில் சித்தர்களின் அட்டமா சித்தி என் நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு நான் நினைத்தது எல்லாம் சாத்தியம். எனக்கு நினைப்பு மட்டும்தான் அவர்களின் சித்தி நிலை எனக்கு இன்னும் வரவில்லை. அவர்களின் திருவடிகளைப்பற்றி அதற்கான பயிற்சிகளும், பூஜைகளும்,  பிரார்த்தனைகளும்தான் நடைபெற்று வருகின்றது. இறைவனின் திருவுள்ளம் எதுவோ?....)

திரும்பி வரும்போது இந்த ரம்மியமான மேகக்கூட்டத்தின் காட்சி இல்லை. வானம் துடைத்து வைத்தது போன்று இருந்தது.

விடியற்காலை 5 மணியளவில் மலைஉச்சியில் உள்ள கோயிலை அடைந்து விட்டோம். இங்கு ஒரு மணிநேரம் இருந்தோம். அந்த நேரத்தில் அங்குள்ள மல்லிகார்ஜூன சுவாமிக்கு ( லிங்கத்திற்கு)  நாங்களே பூஜைகள்  செய்தோம். ( நான் கோயில் ஐயர் என்பதாலும், முதன்முறையாக வந்ததாலும், என் அண்ணனின் நண்பர்கள் என்னையே லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார்கள். இதிலும் அவர்களை விட வயதில் நான் மிகச் சிறியவன்.  கொண்டு போயிருந்த பாக்கெட் தண்ணீர், எண்ணெயைக்கொண்டு அபிஷேகம் செய்வித்தேன். எனக்கு பரம திருப்தி. பின்னர் லிங்கத்திற்கு அவரவர்கள் தத்தமது கரங்களாலே மலர் தூவி பூஜை செய்தோம். பின்னர் அம்மன் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்தவரிடம் நன்கொடை கொடுத்துவிட்டு, விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.
பின்னர் ஒரு இருபது நிமிடம் தியானம் செய்தோம்.
(மலையேறி வந்த வேகத்தில வேர்வை பெருகி சுரம் ஓடியே போய்விட்டது எனக்கு.) 
பின்னர் காலை 6 மணியளவில் மேலிருந்து கீழிறங்க ஆயத்தமானோம். மலை ஏறுவதைவிட கீழிறங்குவது சற்று கடினமாக இருந்தது. ஆளை கீழே தள்ளிவிடுவது போன்ற அபாய சறுக்கல் பாதை உண்டு. மலை ஏறும்போதைவிட இறங்கும்போது மிகுந்த கவனத்துடன் இறங்க வேண்டியதிருந்தது. ஏறும் போது குத்திய சூரை முள் விஷம் சற்று இறங்கி வலி குறைந்திருந்தது. இறங்கும் போது சற்று ஆசுவாசத்துடன் பொறுமையாக இறங்கினோம். ஆசிரம அடிவாரத்திற்கு 10 மணியளவில் வந்து சேர்ந்து விட்டோம்.

நெஞ்சில் நிறைந்த சந்தோஷத்துடன் திரும்பி அந்த மலையைப் பார்த்தேன்.
அருளாற்றலோடு ஒன்றுமே தெரியாததைப் போல் பூமித்தாயின் மடிமீது அமர்ந்திருந்தது அந்தப்  பர்வதமலை.


அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் இறைவன் அருளால் பர்வதமலை யாத்திரை முடிந்து கடலூருக்கு வந்து சேர்ந்து விட்டோம்.

குறிப்புகள் :
அடிவாரத்திலிருந்து மேலே சென்று பூஜை செய்துவிட்டு வர 8 மணி நேரம் போதுமானதாகும்.
சிலருக்கு அதற்கும் மேலேயே ஆனாலும் ஆகும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மலை ஏறி இறங்குவதை தவிர்த்தல் நலம்.

மலைமீது குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.
(இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இல்லை)
  
நாமே கீழிருந்து புறப்படும் போது தண்ணீர், குளுகோஸ் பவுடர், பிஸ்கட், பழம், பூஜைக்குண்டான பூ,  பழம், வெத்திலைபாக்கு அனைத்தும் வாங்கிச் செல்ல வேண்டும்.
இரவு நேரத்தில் மலை ஏற இறங்க நினைப்பவர்கள் டார்ச் லைட் கொண்டு செல்ல வேண்டும்.
மற்ற மலைகளைவிட ஏறுவதற்கு சற்று கடினமான மலை இது.
சில இடங்களில் இரும்பு ஏணியின் மூலம் ஏறிச்செல்லவேண்டும். சாதாரணமாக வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறி இறங்க முடியாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் இந்த மலைப்பயணத்தை தவிர்த்துவிட்டு அடிவாரத்தில் இருந்தே தரிசனம் செய்வது நல்லது. இருதய நோய் உள்ளவர்களும் இப்படியே தரிசனம் செய்வது நலம்.

எந்தவொரு மலைப்பயணமாக இருந்தாலும் முன்பின் சென்றவர்கள் கூட செல்வது நல்லது. 
அல்லது தெளிவாக புரோகிராம் சார்ட் செய்து கொண்டு பயணப்படுவது நலம்.
எல்லாவற்றிற்கும் மேலாக யாத்திரைக்கு அந்த மகேசனின் அருள் வேண்டி பிரார்த்தித்துவிட்டு சென்று வருவது நலம்.


பர்வதமலை குறித்து கூகுளில் சர்ச் செய்தால் நிறைய விபரம் கிடைக்கும்.
பார்வதமலைப்பயணம் குறித்து திருச்செங்கோடு பிரகாசம் என்பவர் விரிவாக அதிக புகைப்படங்களுடன் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.

முகவரி இதோ :

மேற்படி பதிவின் கடைசியில் ஒன்பது  யூ டியூப் வீடியோ காட்சிகள் இணைத்துள்ளார். அதனையும் அவசியம் பாருங்கள். உங்களின் கருத்துக்களையும் அவருக்கு தெரிவியுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........