Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Friday, August 27, 2010

சிவயோகசாரம் 01

இந்த அருட்சிவம் வலைப்பதிவில்  "அருட்சிவம்" "அருட்சிவம்01"  பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு நான் கற்றுணர்ந்தவைகளை உலக மக்களுக்கு எடுத்துக்கூறி எல்லவர்களையும் ஆன்மீக இன்பத்தில் திளைக்கச் செய்யும் நோக்கில் ''சிவயோகசாரம்'' எனும் நூலில் உள்ள விடயங்களை, தங்களுக்கு மேற்படி நூலில் உள்ளவாறும் சில இடங்களில் தற்காலத்தில் நடைமுறையில் உள்ள உரைநடை வாசகப்படியும், சில இடங்களில் எனது அனுபவங்களை இடைஇடையே கூறவும், எல்லாம் வல்ல அருட்சிவத்தின் துணைக்கொண்டும், சித்தர்களின் ஆசியோடும், நூலாசிரியர் பூரணாநந்தர் ஆசியோடும் முயற்சிக்கின்றேன். இந்த பதிவுகளில் / தொடரில்  எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகின்றேன். எனது இந்த முயற்சி வெற்றிபெற இதனை பார்வையிடும் வாசகர்களாகிய நீங்கள் தங்களது கருத்துரைகளை அனுப்ப வேண்டுகின்றேன். இந்நூல் (சிவயோகசாரம்) தொடர்பாக முன்னரே யாரேனும் வலைப்பதிவில் கூறியிருந்தால் அவ்வலைப்பதிவினை எனக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.

பூராணனந்தர் அருளிச் செய்த
சிவயோகசாரம்
சிறப்புப் பாயிரம்
அவையடக்கம்



'கனக வரை' என்னும் புருவத்திடை நடன ஒளி கேட்டானந்திக்கும் எந்தைமார்களே, உங்கள் பாதபங்கட்கு அனந்த வந்தனம்! அறிவிற் சிறியேன் குருமுகமாய் ஹிந்துஸ்தானியால் உணர்ந்த ராஜயோக மார்க்கத்தைப் பல நூல்களிலுள்ள அரும்பொருளொடு 'சிவயோகசாரம்' என வரைதலுற்றேன். நீரைப்பிரித்துப் பாலைக்கொள்ளும் அன்னத்தைப் போலக் குற்றம் தவிர்த்துக் குணத்தைக் கொள்ளக்கோருகின்றேன்.
அறுசீர் விருத்தம்


ஏத முற்ற பேதையேன் இயம்பு மிந்த யோகநூல்
பேத மற்ற போதமுற்றோர் பேசுவார்க ளாசையால்
வேத னைப்பட் டுழலு வாரிம் மெய்யுணராப் பொய்யரிப்
பூத லத்தி லுள்ளதீது புதுமை யன்று புலவிர்காள்.


நீர்வளம் முதலியவகைளால் சிறப்புற்றோங்கும் உத்தர தேசங்களில் பஞ்சாபு என்னும் பாஞ்சால தேசத்தில் அவதரித்தவராய், ஜீவேசுவர பேதாபேத முணர்ந்து நித்தியானுபவம் செய்யுங் பரம யோகீந்திரராய் ஸ்ரீஜனகாம்ஸ பூதரான உதாசி பாபா நானக் குரு பரம்பரையினர் அனேக வருட காலமாக அனுபவித்து வரும் இராஜயோகக் கிரமத்தை அச்சங்கத்திலொருவரும் ஞானசிரேஷ்டரும் தயாளகுண பரிபூரணருமான குரு சரண்தாஸ் பாபாஜி அவர்களால் இந்துஸ்தானி பாஷையில் உபதேசிக்கப்பெற்று, ஸ்ரீமத் நாராயண தேசிகர் நியமனத்தினால் இந்தத் தட்சிண தேசத்திலுள்ள சகல வருணாச்சிரமிகளும் உய்யும் பொருட்டுத் தமிழில் மொழி பெயர்த்து உபநிஷத்துகளிலும், யோகவாசிஷ்டம் பதஞ்சலியம், அடயோகம் முதலியவகைளிலுமுள்ள அரும்பொருளைச் சேகரித்துச் "சிவயோகசாரம்" என நற்பெயரமைத்து இதனை வெளியிடலாயிற்று.
இந்நூலைச் சாங்கோபாங்கமாக உணரும் புண்ணியர்கள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளை அடைவரென்பது திண்ணம்.


அடுத்த பதிவில் குருவணக்கம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் திருவடிகளே போற்றி! பூரணானந்தர் திருவடிகளே போற்றி!


Monday, August 23, 2010

அருட்சிவம் 01



சென்ற பதிவில் கூறியிருந்தபடி இந்த வலைப்பூ தோன்றக் காரணங்களில் சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவும் ஒரு காரணம் என்று கூறினேன். மேற்கொண்டு சில நிகழ்வுகளையும் இங்கு கூறுகின்றேன்.
நான் கிட்டத்தட்ட சுமார் 12 வருடங்களுக்கு மேல் கணினியை பயன்படுத்தி வருகின்றேன். அதாவது விண்டோஸ்95 க்கு முந்தைய பதிப்பு முதற்கொண்டு பயன்படுத்தி பார்த்துள்ளேன்.
1994 முதல் 2002 வரை சென்னை நகரில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வாசம். அப்பகுதியில் எனக்கு நிறைய ஆன்மீக நண்பர்கள் உண்டு. இக்காலத்தில் விக்கிரவாண்டி வி. இரவிச்சந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு "பேசும் ஆவிகள்" என்ற மாத இதழ் வெளி வந்து கொண்டிருந்தது. அதனை சென்னை திருவல்லிக்கேணி ஸ்டெர்லிங் பப்ளிகேஷன் நிறுவனத்தார் வெளியிட்டு வந்தனர். 1998 ஆம் ஆண்டு வாக்கில் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மேற்படி இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட பின்னர், மீடியம் சி.எம். இரத்தினசாமி, மீடியம் திரு. ரங்கநாத கண்ணன், திரு. சாய்பாலு மற்றும் நான் (மீடியம் சாய்மீனன் )ஆசிரியர் பொறுப்பேற்று "பேசும் ஆவிகள்" மாத இதழை நடத்தி வந்தோம். ஸ்டெர்லிங் பப்ளிகேஷன் உரிமையாளர் திரு. வாசு அவர்கள் வாய்புற்று நோயினால் இளவயதிலேயே இயற்கை எய்திய பின்னர் மேற்படி இதழ் நின்று விட்டது. இக்காலத்தில் மதுரை நண்பர் இரசமணிச் சித்தர் சே. விஸ்வநாதன் அவர்கள் சித்தர் கலைகள் மற்றும் அமானுஷ்ய ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். அப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்கள் கலையைப் பற்றியும், அமானுஷ்யங்கள் பற்றியும் இணைய இதழ் ஒன்று ஆரம்பிக்கலாம் ‍என்று எண்ணம் உருவானது. அக்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுத்துருவில் சில பிரச்சனைகள் தோன்றியது. சில காலம் கழித்து நான் எதிர்பார்த்தது போல் சித்தர்கள் என்ற பெயரில் டொமைன் நேம் கிடைக்கவில்லை. மேலும் சென்னையிலும் தமிழ்நாட்டிலும் ஹோஸ்ட்டிங் ஸ்பீடு வெகு குறைவாக இருந்த காரணத்தினால் மேற்படி எண்ணங்களை செயலாக்கம் செய்ய முடியாமல் போனது. பின்னர் எனது கவனத்தை இறைவன் மீதும் சித்தர்கள் மீதும் செலுத்தி வந்தேன்.
சமீபகாலமாக சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் யுனிகோட் என்ற புதிய டெக்னாலஜியும், வலைப்பூக்கள் என்னும் பிளாக்ஸ் டெக்னாலஜியும் தோன்றிய பின்னர், என்னைப் போன்றே எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற தமிழ் அன்பர்கள் ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்களை இணையம் மூலம் பதிந்து வந்தனர். சமீப ஆண்டுகளாக ஸ்ரீ லங்கத்து தோழி மிகச் சிறப்பாக சித்தர்கள் இராச்சியம் பிளாக்கை நிர்வகித்து வருகின்றார். இன்னும் நான் எனது முதல் பதிவில் கூறியிருந்தவர்களும் மற்றும் பலரும் சிறப்பாக செய்து வருகின்றனர். இவர்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். தோழி பதிவேற்றும் பதிவுச் செய்திகளை பற்றி நான் முன்னமே அறிந்திருந்தாலும் கூட தோழி அவர்களின் முயற்சியையும், சித்தர்கள் மேலுள்ள ஈடுபாட்டையும், தோழியின் செயலாக்கத்திறனையும் நான் மிகவும் மெச்சுகின்றேன். எந்த ஒரு நல்ல செய்தியை யார் கூறினாலும் அச்செய்தி உலகமக்களுக்கு சென்று சேர்கின்றுதே என்று நினைப்பனே தவிர, நான் சொல்லவிரும்பும் விஷயங்க‍ளை பிறர் கூறிவிட்டனரே என்று ஆதங்கப்பட மாட்டேன். ஏனெனில் சித்தர்கள், சித்தர்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள், ஆன்மீகம், தேவாரம், திருவாசகம் உள்ளடக்கிய பன்னிரு திருமுறைகள், திருமந்திரம், திருஅருட்பா, இன்னபிற மெய்ச்சாத்திரங்களை பற்றி உலகறியச் செய்யும் வலைப்பதிவாளர்களை நான் மிகவும் வாழ்த்தி வணங்குகின்றேன்.


நிற்க,


தினசரி சித்தர்கள் இராச்சியத்தில் புதிய பதிவுகள் இடப்பட்டுள்ளதா? என்று பார்த்து படிப்பது வழக்கம். இடையில் 2010 ஆகஸ்ட் 4ம் தேதி பிரவுசரில் F4 கீயை அழுத்திவிட்டு http://siththarkal.blogspot.com என்பதற்கு பதிலாக தமிழ் உச்சரிப்பான சித்தர்கள் என்பதற்கு பழக்க தோஷத்தில் http://siddharkal.blogspot.com என்று டைப்செய்து Eenter பொத்தானை அமுக்கியவுடன் பிளாக்கர் டாட் காம் ஆனது மேற்படி முகவரியில் பிளாக் இல்லை. நீங்கள் ரிஜிஸ்டர் செய்கின்றீர்களா ‍என்ற செய்தியை அறிவித்தது. சற்று திகைத்துவிட்டேன். சித்தர்கள் பெயரில் டொமைன் நேம் கி‍டைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டவனுக்கு சித்தர்கள் அருளால் சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவை பார்க்கப்போய் அவர்களின் பெயரிலேயே ஒரு பிளாக் கிடைக்கின்றதே என்று மகிழ்ந்து உடன் ரிஜிஸ்டர் செய்து அதில் 2010 ஆகஸ்ட் 17ல் முதல் பதிவையும் வலையேற்றிவிட்டேன்.


சென்ற பதிவினைப் பார்த்த ஒரு பெயரில்லா அன்பர் கீழ்க்கண்டவாறு கமென்ட் அடித்துள்ளார்.
//உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்..//
இதற்கு நான் பதில் கமென்ட்டும் கொடுத்துள்ளேன்.
அதன்பின்னரும் அவர் கமென்ட் கூறியுள்ளார் கீழ்கண்டவாறு..
//அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு ‍உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு பற்றியும், உருவான சூழ்நிலை பற்றியும், என்ன சொல்றீங்கன்னு பார்க்கணும்.. எப்போ அடுத்த பதிவு போடுவீங்க அதுக்கும் ஏதும் நல்ல நேரம் இருக்கா? //
இடையில் நான் 3 நாட்களாக கணினியைத் தொடவில்லை. அதனால் புதிய பதிவுகளை இட இயலவில்லை. (*காரணம் கீ‍ழே தனியாக குறிப்பிட்டுள்ளேன்) அதற்காக அந்த பெயரில்லா அன்பர் மீண்டும் ,கீழ்கண்டவாறு இன்று 23.08.2010ல் கமென்ட் அனுப்பியுள்ளார்.
// ஏய் சித்தனே! பதிவு போடலையா? பதிவு போடாமேலே இந்த பில்டப் கொடுககிரியேப்பா?//
// பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுசித்தரே.//
நானும் பயப்படாமல் கமென்ட்டை வெளியிட்டுவிட்டேன்.


அன்பு பெயரில்லாதவருக்கு வலைப்பதிவர்கள் சார்பாக தங்களுக்கு கீழ்கண்ட பதிலை கூற விரும்புகின்றேன்.
வலைப்பதிவு என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
வலைப்பதிவாளர்கள் தங்களது அனுபவங்களை, எண்ணங்களை, பிறரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற மேலான எண்ணத்தினால் பிளாக்கர்.காம் போன்ற இணையதளங்கள் கொடுக்கும் இலவச வசதியைக் கொண்டு, தங்களது பொன்னான நேரத்தில், பொதுநலனுக்காக சில மணி நேரங்கள் ஒதுக்கி, சொந்த உழைப்பில் டைப் செய்து வெளியிடுவதே வலைப்பதிவுகள் ஆகும். உங்களைப் போன்றவர்கள் மிக மட்டமான வார்த்தைகளைக் கொண்டு அனுப்பும் கமெண்ட்டுகளை தணிக்கை செய்யும் வசதியையும் பிளாக்கர்.டாம் கொடுத்துள்ளது. ஒரே ஒரு ஸ்பேம் என்ற பொத்தானை அழுத்தி உங்களைப் போன்றவர்கள் அனுப்பும் கமென்ட்டை அழித்துவிடமுடியும்.
posted by என்ற இடத்தில் வலைப்பதிவர்கள் கொடுக்கும் பெயரையே பிளாக்கர்.காம் இடும் இதுகூட உங்களுக்கு தெரியாதா?. வலைப்பதிவர்கள் வலைப்பதிவு போடாவிட்டால் நீங்கள் என்ன கழுத்தையா சீவி விடுவீர்கள்?. பயப்படாமல் போடுங்கள் என்று கூறுகின்றீர்களே ?. நான் போட்டுவிட்டேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?. என்னைப் படைத்த ஆண்டவனுக்கு நான் பயப்படுவதில்லை. ஏன்? எனில் என்னிடம் நேர்மை. உண்மை, உழைப்பு, நாணயம், இறைவனிடத்தில் மாறா பக்தி உள்ளது. உங்களுக்கு?. இனி நீங்கள் அனுப்பும் கமென்ட்ஸை நான் வெளியிடுவதாகவும் இல்லை. விருப்பம் இருந்தால் வலைப்பதிவை பாருங்கள். ,இல்லையெனில் உங்கள் விருப்பம்.


நிற்க. அன்பு வலைப்பதிவர், வாசக, வாசகிகளே! ஒரே ஒரு பெயரில்லாதவர் கமென்ட்டால் இந்த வலைப்பதிவில் ஆன்மீகம் தவிர்த்து சில விஷயங்கள் சூழ்நிலை காரணமாக கூற நேரிட்டது. இதை நான் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் மீண்டும் உங்களுக்கும் எனக்கும் இவை போன்ற கமென்ட்ஸ் வராமலிருக்க இந்த காட்டமான பதில்.


* எனது தம்பியின் மனைவியும், எனது மனைவியின் தங்கையுமானவருக்கு தலைப்பிரசவம் ( 19.08.2010 வியாழன், ஆண் குழந்தை) ஆனதால் கடலூர் அரசு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்த காரணத்தால் 3 நாட்களாக கணினியில் தட்டச்சு செய்யமுடியவில்லை. 

இனி வாரந்தோறும் பதிவுகளை பதிவேற்ற முயற்சி செய்கின்றேன்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

Tuesday, August 17, 2010

அருட்சிவம்

இந்த பதிவை இன்று விக்ருதி வருடம் ஆவணி மாதம் 1ந்‍தேதி (17-08-2010) சூரிய உதயத்திற்கு முன்பு வலையேற்ற முயன்றேன். சிறு சறுக்கல் அதனால் மதியம் 12.30 மணியளவில், முன்பு கூறியிருந்த படி இந்த வலைப்பூ அழகாக இன்று மலர்ந்தது. இந்த வலைப்பூ மொக்கிலே கருகாமல் மலர வைத்ததற்கு பரம்பொருள் அருட்சிவத்தினை நான் வந்தனம் செய்கின்றேன். இதற்கு ஆசியளித்த எனது குருநாதரும் சுருளிமலை சித்தருமான கதசசிகார சித்தருக்கும், ஸ்ரீ சீரடி(புட்டபர்த்தி) சாய்நாதனுக்கும் எனது அன்பான வந்தனங்கள்.
சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்களை பற்றியும், அவர்கள் மனித குலம் உய்ய தோற்றுவித்த ஜோதிட, மணி, மந்திர, ஒளஷதம் மற்றும் இன்ன பிற சித்தர் கலைகள் பற்றி எனது 16 வயது ஆரம்பம் முதல் 35 வயது முடிவு வரை ஆராய்ச்சி செய்தேன். ஆராய்ச்சி என்பதை விட சித்தர்களின் அருளால் இக்கலைகளை பயின்‍றேன் என்று கூறுவதுதான் சரியானது. முடிவில் நான் யார் என்பதைப் பற்றி சில சித்தர்கள் எனக்கு அறிவித்தார்கள். சித்தர்கள் கலைகளில் நான் கற்றவை ஜோதிடம், இரசமணி கட்டுதல், சித்த மருத்துவம், சரக்கலை, யோகம், அஷ்ட கர்ம மந்திரம், சித்தர்களுடன் தொடர்பு கொள்ளுதல், இறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளுதல் இன்னும் பிற.

இவைகள் அல்லாமல் நான் உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு மிக மிக முக்கியமான கணினி இயல் என்னும் கலையையும் சித்தர்களின் அருளினாலே கற்று தேர்ந்தேன். இதற்கு சாய்பாபாவின் ஆசியும் உண்டு. பொழுது போக்கிற்காக நான் கற்றுக்கொண்ட கணினி இயல் இன்று எனது ஆன்ம வளர்ச்சிக்காக, உலக நன்மைக்காக, என்னைப்போன்றே, சித்தர்களின் ஆசியும்பெற்று, பரம்பொருளாகிய சிவத்தின் அருள் பெற்று என்றும் இறவா நிலைபெறுவதற்குண்டான வழிகளை கூறும் வலைப்பதிவாளர்கள் ஸ்ரீலங்கத்து தோழி, ‍ஜெகதீஸ்வரன், தமிழ்மணி, ரமணன், ஓம்நமசிவாய மதுரை சிவராம், சதயம் போன்றவர்களுக்கு கண் போன்றது இந்த கணினி இயல்.
எனது வாழ்க்கை இல்வாழ்க்கையிலிருந்து ஞானவாழ்க்கையா ?. ஞானவாழ்க்கையிலிருந்து
இல்வாழ்க்கையா ?. என்பதில் எனது வாழ்க்கை எனது 35 வயது வரை இல்வாழ்க்கையிலிருந்து ஞானவாழ்க்கையாகவும், 36 வயது ஆரம்பம் முதல் ஞானவாழ்க்கையிலிருந்து இல்வாழ்க்கையாகவும்
செல்கின்றது. இதன் விபரம் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

நான் பார்வையிட்டவை பகுதியில் எனக்கு பிடித்த வலைப்பதிவுகளின் இணைப்புகளை கொடுத்துள்ளேன். மேலும் இணைப்புகள் தொடரும். முன்னரே இந்த வலைத்தளங்களை பார்த்தவர்கள் விட்டுவிடவும்.
இன்று அருட்சிவ ஞான பீடம் தமது 3 வது அகவையை தொடங்குகின்றது. எனது இந்த சரீரம் 38வது அகவையை தொடங்குகின்றது. (ஆன்மாவிற்கு அகவை கணக்கிட முடியவில்லை)
அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு ‍உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு பற்றியும், உருவான சூழ்நிலை பற்றியும், சித்தர்களின் அருளைப்பற்றியும், இந்த அருட்சிவத்தின் நோக்கம் பற்றியும் கூறுகின்றேன்.
அருட்சிவத்தின் அருள் தொடரும்........